கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மஹிந்திரா பொலிரோ கேம்பர் வாகனம் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ கேம்பர் வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிக்கப் டிரக் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ கேம்பர் விளங்குகிறது. வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானத் துறை மற்றும் சுரங்க தொழில்களுக்கான பயன்பாட்டுக்கும், பணம் எடுத்துச் செல்வதற்கும், தனிநபர் மார்க்கெட்டிற்கும் என பயன்பாட்டை பொறுத்து பல்வேறு மாடல்களில் இந்த பிக்கப் டிரக் வாகனம் கிடைக்கிறது.

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் தற்போது மஹிந்திரா பொலிரோ கேம்பர் வாகனம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பிரிமீயம் அம்சங்களுடன் பொலிரோ கேம்பர் வாகனத்தில் கோல்டு இசட்எக்ஸ் என்ற புதிய வேரியண்ட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வாகனத்தில் இரண்டு வரிசை இருக்கை அமைப்புடன் டியூவல் கேபின் மற்றும் 1,000 கிலோ எடை சுமக்கும் கொள்திறன் கொண்ட பின்புற பக்கெட் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தில் ஏறி, இறங்குவதற்கு எளிதான வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் வடிவம் ஆகியவற்றுடன் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபாக்ஸ் லெதர் கவர் இருக்கைகள்,, ஹெட்ரெஸ்ட், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், பவர் ஸ்டீயரிங், சீட் பெல்ட்டுகள் ஆகியவற்றை இந்த கோல்டு இசட்எக்ஸ் வேரியண்ட் பெற்றிருக்கிறது. ஏசி வசதியும் உள்ளது.

இந்த வாகனத்தில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இதுதவிர்த்து, கோல்டு விஎக்ஸ், 4 வீல் டிரைவ், ஏசி அல்லாத வேரியண்ட் மற்றும் கேஷ் வேன் ஆகிய வேரியண்ட்டுகளிலும் இந்த பிக்கப் டிரக் கிடைக்கிறது. அதிக உறுதி, போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ், நீடித்த உழைப்பு ஆகியவை இந்த மாடலுக்கான வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

மஹிந்திராவின் 24 மணி நேர அவசர உதவி சேவை, 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கும் விஷயங்கள். அதாவது, தனிநபர் மற்றும் வரத்தக பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்ற பிக்கப் டிரக் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ கேம்பர் பிக்கப் டிரக் வாகனம் ரூ.7.26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும். இது மிகவும் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த பிக்கப் டிரக் மாடலாக மதிப்பு பெறுகிறது.


Click it and Unblock the Notifications








