நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய மஹிந்திரா பொலிரோ பிக் அப் டிரக் அறிமுகம்!
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பிக் அப் டிரக் வரிசையில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பிக் அப் டிரக் மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பொலிரோ சிட்டி பிக் அப் என்ற பெயரிலான புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலில் அதிக உறுதியான சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிக பாரம் ஏற்றிய நிலையிலும் சிறப்பான கையாளுமை மற்றும் சொகுசு அம்சஙகளை பெற்றிருக்கிறது.

குறிப்பாக, நகர்ப்புற பயன்பாட்டிற்கு அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய பிக் அப் டிரக் மாடல் வந்துள்ளது. கோ டிரைவர் இருக்கையின் இடவசதியும், சொகுசு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் 1.4 டன் எடை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது. இந்த டிரக்கில் 8.7 அடி நீளமும், 5.6 அடி அகலமும் உடைய பொருட்கள் ஏற்றும் பக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிக் அப் டிரக்கில் எளிதாக பொருட்களை ஏற்றி, இறக்கும் வகையில் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும்.

பொலிரோ பிக் அப் டிரக் வரிசையில், 1.7 டன் மாடலானது நகரங்களுக்கு இடையிலான பயன்பாட்டு மாடலாகவும், பொலிரோ சிட்டி பிக் அப் மற்றும் மேக்ஸிடிரக் ஆகிய இரண்டு மாடல்களும் நகர்ப்புற பயன்பாட்டிற்கானதாகவும் இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இந்த புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக்கில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டீசல் எஞ்சின் மிகச் சிறப்பான இழுவை திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் தர வல்லதாக இருக்கும்.

புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலுக்கு ரூ.6.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நீடித்த உழைப்பு, சிறப்பான ஓட்டுதல் தரம் மற்றும் இதன் ரகத்தில் சிறப்பான பாரம் சுமக்கும் திறன் கொண்ட மாடலாக வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








