பிஎஸ்-6 எபெஃக்ட்... சிறிய டீசல் இன்ஜின் உற்பத்தியை நிறுத்தி விட மஹிந்திரா முடிவு? காரணம் இதுதான்...
சிறிய டீசல் இன்ஜின் உற்பத்தியை நிறுத்தி விட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் தனது லைன் அப்பில் இருந்து, சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தி விட திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கேயூவி100 என்எக்ஸ்டி (KUV100 NXT) மாடலில் உள்ள 1.2 லிட்டர் டீசல் இன்ஜினைதான் விற்பனையில் இருந்து விலக்கி விட மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் 1.2 லிட்டர் எம்பால்கான் டி75 மூன்று சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 78 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியாவில் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன.

இதன் காரணமாகதான் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் உற்பத்தியை கைவிட்டு விட மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ET Auto செய்தி வெளியிட்டுள்ளது. மார்க்கெட்டில் இந்த இன்ஜின் கேயூவி100 மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இது இந்தியாவில் அவ்வளவு பிரபலமான மாடல் கிடையாது. மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இந்த மாடல் விற்பனையாகி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் 1.2 லிட்டர் டீசல் இன்ஜினை அப்டேட் செய்ய பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் கேயூவி100 என்எக்ஸ்டி குறைவான எண்ணிக்கையில்தான் விற்பனையாகிறது. எனவே அதன் இன்ஜினை அப்டேட் செய்தாலும் கூட லாபம் ஈட்டுவது சந்தேகமே. இதன் காரணமாகதான் இந்த இன்ஜின் உற்பத்தியை நிறுத்தி விட மஹிந்திரா முடிவு செய்திருக்கலாம் என தெரிகிறது.

ஆனாலும் பெரிய டீசல் இன்ஜின்களை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என கூறப்படுகிறது. எனவே வருங்காலத்தில் இந்த பெரிய இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் பெரிய டீசல் இன்ஜின் லைன் அப்பானது, 1.5 லிட்டர், 2.0 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் இன்ஜின்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மஹிந்திராவின் லைன்அப்பில் சமீபத்தில்தான் புதிதாக இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் முதல் முறையாக மராஸ்ஸோ எம்பிவி காரில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரிலும் கூட இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு, இந்திய மார்க்கெட்டில் தனது லைன்அப்பில் இருந்து டீசல் இன்ஜின்களை விலக்க திட்டமிட்டு வரும் 3வது நிறுவனம் மஹிந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாருதி சுஸுகியின் நிலைப்பாடு மட்டும் வேறானது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது லைன் அப்பில் உள்ள அனைத்து டீசல் இன்ஜின்களையும் உற்பத்தியில் இருந்து விலக்கி விட முடிவு செய்துள்ளது. ஆனால் மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின்களை மட்டுமே கைவிட திட்டமிட்டுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி காரின் டீசல் வேரியண்ட்கள் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டாலும் கூட, இந்த மைக்ரோ-எஸ்யூவியானது 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்கும் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் தொடர்ந்து கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








