தீபாவளி ரிலீஸ் பட்டியலில் மஹிந்திரா கேயூவி100 மின்சார எஸ்யூவி!
பண்டிகை காலத்திற்கு முன்னதாக மஹிந்திராவின் முதல் மின்சார கார் மாடலான கேயூவி100 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மஹிந்திராவின் புதிய கேயூவி100 மின்சார எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதா ஓவர்ட்ரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சாதாரண மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியிலிருந்து சில டிசைன் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் ரேடியேட்டர் க்ரில் எடுக்கப்பட்டு பேனல் பொருத்தப்பட்டு இருக்கிறது. மின்சார மாடலை குறிக்கும் விதத்தில் நீல வண்ண அலங்கார ஸ்டிக்கர் கார் முழுவதும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. முன்புறத்திலும் பின்புறத்திலும் மின்சார காருக்கான பேட்ஜுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற கதவு சாம்பல் வண்ண பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 30kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் மோட்டார் திறன் குறித்த தகவல் தெரியவில்லை. இ-வெரிட்டோ காரில் பயன்படுத்தப்படும் அதே 72 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதேபோன்று, பேட்டரியை குயிக் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வரும் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் கார் பட்டியலில் இந்த மின்சார எஸ்யூவி இடம்பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக தனது எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலையும் மஹிந்திரா களமிறக்கும் திட்டத்தை கையில் வைத்துள்ளது. இந்த எஸ்யூவி 350 கிமீ முதல் 400 கிமீ ரேஞ்ச் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








