சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை!
சென்னையில் வைத்து மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு மஹிந்திரா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே வெரிட்டோ எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வரும் அந்நிறுவனம், அடுத்து கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய எஸ்யூவி ரக கார்களின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு கார்களின் மின்சார மாடல்களும் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்த கார்களில் மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த சோதனையானது இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் வைத்து மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. இதில், சில பகுதிகள் மட்டும் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் 77 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுதான் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் மின்சார மாடலில் 40kW ஏசி இன்டக்ஷன் மின் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 54 பிஎஸ் பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இதன் பேட்டரியை சாதாரண 7.2kW சுவற்றில் மாட்டக்கூடிய சாதாரண சார்ஜர் மூலமாக மின்னேற்றம் செய்வதற்கு 5 மணி 45 நிமிடங்கள் பிடிக்குமாம். இதற்கு வழங்கப்பட இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 55 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலும் காட்சிப்படுத்தப்படும்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








