ஃபோர்டு இந்தியா பிராண்டை தூக்கி நிறுத்த 3 எஸ்யூவிகளுடன் முண்டாசு கட்டிய மஹிந்திரா!
மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுவிட்டது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளை மஹிந்திரா கவனிக்க இருக்கிறது.

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி பணிகளையும், புதிய கார் உருவாக்கப் பணிகளையும் மஹிந்திராவின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

மேலும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் குஜராத் ஆலைகளையும் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்திடம் செல்ல இருக்கிறது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திராவும், 49 சதவீத பங்குககள் ஃபோர்டு வசமும் இருக்கும்.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டு நிறுவனமானது மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பாட்டிலும், நிர்வாக ரீதியில் ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பர். இந்த நிலையில், வரும் ஆண்டு மத்தியில் இருந்து இந்த கூட்டு நிறுவனம் செயல்பட துவங்கும்.

இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் திட்டங்களை மஹிந்திரா கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஃபோர்டு பிராண்டில் 3 புதிய எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இதில், புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஒன்றும் இடம்பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். அதாவது, சில மஹிந்திரா கார்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ஃபோர்டு பிராண்டில் வரும் என்று தெரிகிறது. தவிரவும், புதிய எஸ்யூவி மாடல்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று எஸ்யூவி மாடல்களுமே இப்போது உருவாக்கப் பணிகளில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எஸ்யூவி மாடல்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருப்பதால், பல்வேறு விதமான பட்ஜெட்டில் புதிய எஸ்யூவி கார்களை ஃபோர்டு பிராண்டில் வெளியிட மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த கார்களில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கும் புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மாடல்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு பிராண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்யூவி கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், வெளிநாடுகளில் மஹிந்திரா கார்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ஃபோர்டு நிறுவனத்தின் டீலர் நெட்வொர்க்குகளை பயன்படுத்திக் கொள்ளவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








