மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம்!
மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மினி டிரக்கின் முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக்கின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக இந்த ஜீட்டோ ப்ளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மாடலின் டெக் எனப்படும் பாரம் ஏற்றுவதற்கான பக்கெட் பகுதியானது 7.4 அடி நீளமும், 4.9 அடி அகலமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,500 மிமீ ஆக உள்ளது.

மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக் 1,445 கிலோ எ"ை கொண்டது. இந்த டிரக்கில் 715 கிலோ வரை பாரத்தை ஏற்ற முடியும். சாதாரண ஜீட்டோ மாடலைவிட இந்த ஜீட்டோ ப்ளஸ் மாடல் பல்வேறு விதத்திலும் கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த மாடலில் 625 சிசி வாட்டர் கூல்டு எம்-டியூரா டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சாமக 16 பிஎச்பி பவரையும், 38 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சாதாரண ஜீட்டோ மினி டிரக்கைவிட இந்த புதிய ஜீட்டோ ப்ளஸ் மாடல் 30 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். அதாவது, லிட்டருக்கு 29.1 கிமீ மைலேஜை தரும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. 10.5 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது.

மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக்கில் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் என இரண்டு பேர் செல்வதற்கான இருக்கை வசதி கேபினில் உள்ளது. சிறப்பான இடவசதி, ஓட்டுவதற்கு சிறப்பான அம்சங்களையும் இந்த மினி டிரக் பெற்றுள்ளது.

புதிய மஹிந்திரா ஜீட்டோ ப்ளஸ் மினி டிரக்கிற்கு ரூ.3.46 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மஹிந்திரா ஜீட்டோ மினி டிரக் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு டன் எடைக்கும் குறைவான பாரம் சுமக்கும் திறன் கொண்ட முதல் மஹிந்திரா மினி டிரக் மாடலாக வந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த ரகத்தில் 8 மாடல்களை மஹிந்திரா விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications








