கண்ணீர் மல்க விடைபெறும் புகழ்வாய்ந்த வாகனங்கள்... சோகத்தில் வாகன ஓட்டிகள்...!
டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள், புகழ்வாய்ந்த மினி வேன் மாடல்களை விற்பனையில் விலக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய பாதுகாப்பு விதி அண்மையில் அறிமுகமான நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் புதிய மாசு உமிழ்வு விதியும் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் புகழ்வாய்ந்த மாடல்களை, சந்தையில் இருந்து விலக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே டாடா நிறுவனத்தின் நானோ, மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆம்னி, ஈகோ, ஆல்டோ உள்ளிட்டவை, சந்தையில் இருந்து பின்வாங்கிக் கொள்ளப்பட்ட நிலையில், கூடுதலாக சில வாகனங்கள் பின் வாங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை கார்டாக் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு விதியில் முக்கிய அம்சங்களாக, ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஓட்டுநருக்கான ஏர்பேக், வேகம் குறித்த எச்சரிக்கை, சீட் பெல்ட் வார்னிங் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்தால், வாகனங்களின் விலை பன் மடங்கு அதிகரித்துவிடும். தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் இந்த வாகனங்கள் மலிவான விலையில் இருப்பதன் காரணமாகவே, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவை விலையுயர்வைப் பெறுமானால், அந்த வரவேற்பு நீங்குவதுடன், வாகன நிறுவனங்களுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

இதுபோன்ற காரணங்களால், டாடா ஏஸ் மேஜிக், மஹிந்திரா நிறுவனத்தின் ஜீட்டோ மற்றும் சுப்ரோ உள்ளிட்ட மினி வேன்கள் ரகத்திலான வாகனங்கள் சந்தையை விட்டுக் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. புதிய பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு விதியால், மக்கள் மத்தியில் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் இந்த வாகனங்கள் இன்னும் சில நாட்களில் சந்தையை விட்டு விலக இருக்கின்றன.

இதுகுறித்து டாடா நிறுவனத்தின் கமர்சியல் ரக வாகன தயாரிப்பு துறையின் தலைவர் கிரிஷ் வாஹ் கூறுகையில், "அனைத்து எம்1 ரக வாகனங்களும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதில், நல்ல ரேடிங்கைப் பெற வேண்டுமானால், புதிய விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு, டாடா ஏஸை உருவாக்கினால், அது அதிக விலைக் கொண்டதாக உருவெடுக்கும். இதன்காரணமாகவே, இதனை சந்தையில் விலக்கிக் கொள்கிறோம்" என்றார்.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயன்கா கூறுகையில், "மினி வேன்களை புதிய விதிகளுக்கு ஏற்ப உருவாக்குவது, அதன் விலையை பன் மடங்கு உயர்த்தும். இதனால், நாங்கள் ஏற்கனவே ஜீட்டோ மினி வேன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம். மேலும், புதிய விதிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத சூழலில் தற்போது அனைத்து மினி வேன்களும் இருக்கின்றன. ஆகையால், அவை அனைத்தும் சந்தையை விட்டு வெளியேறும் அபாயத்தில் இருக்கின்றன. இதுகுறித்து எங்களது கோரிக்கையை அரசிடம் முறையிட இருக்கின்றோம்" என தெரிவித்தார்.

டாடா நிறுவனத்தின் ஏஸ் மேஜிக் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் சுப்ரோ, ஜீட்டோ மினி வேன்கள் முக்கியமாக கிராமப் புற மக்களின் பயன்பாட்டில்தான் அதிகம் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், இந்த மினி வேன்கள் அப்பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே தற்போது இந்த வாகனங்கள் மக்கள் பயன்பாட்டில் அதிகம் காணப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனம் பிக் ட்ரக் ரகத்திலான ஏஸ் மற்றும் சுப்ரோ மாடல்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








