மஹிந்திரா மராஸ்ஸோ காரின் 8 சீட்டர் மாடலின் டாப் வேரியண்ட் அறிமுகம்!
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அதிக வசதிகள் கொண்ட M8 வேரியண்ட்டில் இப்போது 8 சீட்டர் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் 8 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு அக்டோபரில் மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் M2, M4, M6 மற்றும் M8 ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், அனைத்து 7 சீட்டர் மாடல் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைத்தது. ஆனால், 8 சீட்டர் மாடலானது எம்-2, எம்-4 மற்றும் எம்-6 ஆகிய வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைத்து வந்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அதிக வசதிகள் கொண்ட M8 வேரியண்ட்டில் இப்போது 8 சீட்டர் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ 8 சீட்டர் மாடலின் எம்-8 வேரியண்ட்டுக்கு ரூ.13.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது மராஸ்ஸோ காரின் அதிக விலை கொண்ட வேரியண்ட். மராஸ்ஸோ 7 சீட்டர் எம்-8 வேரியண்ட்டை விட ரூ.8,000 கூடுதல் விலையில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது.

இந்த புதிய டாப் வேரியண்ட்டில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17 அங்குல அலாய் வீல்கள், பகல்நேர விளக்குகள், ஃபாக்ஸ் லெதர் சீட்டுகள், சன் ஷேடுகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இந்த வேரியண்ட் பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் சென்னையிலுள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனத்தின் வடிவமைப்பு ஆலோசனைகளும் பெறப்பட்டு வடிவமைப்பு யுக்திகள் கையாளப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி போலவே, உலகளாவிய சந்தையை மனதில் வைத்து இந்த புதிய மஹிந்ததிரா மராஸ்ஸோ எம்பிவி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஏராளமான வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், அண்மையில் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை அதிகரிக்கப்பட்டது. இதனால், ரூ.9.99 லட்சம் விலையில் வந்த இந்த காரின் பேஸ் மாடல் தற்போது ரூ.10.29 லட்சம் முதல் ரூ.10.39 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








