வாரே வா... 7 புதிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா
சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், 7 புதிய கார் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்யூவி ரக கார் தயாரிப்பில் பிரபலமான மஹிந்திரா நிறுவனம் பல புதிய கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில், எலெக்ட்ரிக் கார் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதமே எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் குறித்து மஹிந்திரா உறுதி செய்துவிட்டது.

அதன்படி, கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளின் மின்சார மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்தது. மேலும், மஹிந்திராவின் உதவியுடன் ஃபோர்டு ஆஸ்பயர் காரின் மின்சார மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுதவிர்த்து, தனது பிரபலமான எஸ்யூவி மாடல்களாக வலம் வரும் ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, தார், பொலிரோ ஆகியவற்றின் புதிய தலைமுறை மாடல்களாக களமிறக்கப்பட இருக்கின்றன. மேலும், சாங்யாங் எக்ஸ்100 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் டிவோலி எக்ஸ்எல்வி எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட புதிய 7 சீட்டர் மாடலையும் மஹிந்திரா களமிறக்க உள்ளது.

இந்த மாடலானது மஹிந்திரா எஸ்204 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பயன்படுத்தப்பட உள்ள புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என்று தெரிகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, தார், எக்ஸ்யூவி500 மற்றும் பொலிரோ ஆகிய கார்கள் மஹிந்திராவின் ஜென்-3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணையான பாதுகாப்பு தர அம்சங்களை பெற்றிருக்கும். அதேபோன்று, வடிவமைப்பு, வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 ஆகிய கார்களில் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். இந்த ஒரே எஞ்சின் 140, 160 மற்றும் 185 பிஎச்பி என்ற மூன்றுவிதமான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் பயன்படுத்தப்படும்.

இதில், 140 பிஎச்பி எஞ்சின் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியிலும், 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் புதிய ஸ்கார்ப்பியோவிலும், 185 பிஎச்பி எஞ்சின் எக்ஸ்யூவி500 எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும். தற்போதைய 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சினைவிட இவை மேம்பட்ட தரத்திலும், சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்ததாகவும் வர இருக்கின்றன. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல்கள் சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








