சஸ்பென்ஷனில் பிரச்னை... எக்ஸ்யூவி300 எஸ்யூவியை திரும்ப அழைக்கிறது மஹிந்திரா
குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் ரக மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கடும் போட்டியையும் சமாளித்து விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையையும் பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் சஸ்பென்ஷனில் உள்ள முக்கிய பாகத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளை திரும்ப அழைத்து ஆய்வு செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. எவ்வளவு எண்ணிக்கை என்பது தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து பிரச்னை இருப்பதாக கருதப்படும் எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளின் உரிமையாளர்களுக்கு டீலர்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று காரின் வின் நம்பரை கொடுத்து உங்களது எக்ஸ்யூவி300 கார் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை சஸ்பென்ஷனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், சஸ்பென்ஷனை கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ் மையத்தில் ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுத்து மாற்றித் தரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையானது எக்ஸ்யூவி300 உரிமையாளர்களின் நலன் கருதி தாமாகவே முன்வந்து மஹிந்திரா நிறுவனம் எடுத்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் பிரச்னை இருப்பதாக தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது ரூ.8.10 லட்சம் முதல் ரூ.12.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தொடர்ந்து சிறந்த தேர்வாக முன்னிலைப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








