மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆட்டோமேட்டிக் மாடல் விரைவில் அறிமுகம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் மஹிந்திரா அண்மையில் எக்ஸ்யூவி300 என்ற புத்தம் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கியது. சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான டிசைன், தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு சிறந்த மாற்று தேர்வாகவும் கருதப்படுகிறது. இதனால், விற்பனையிலும் கலக்கி வருகிறது.

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் மேனுவல் கியர்பாக்ஸ் தேப்வில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மிகுந்த இந்த ரகத்தில் விரைவில் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியும் வர இருக்கிறது.

இதனால், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் சந்தையை தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திராவின் நாசிக் ஆலை அருகே மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்ப்டடு இருக்கிறது. அதுகுறித்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது. சோதனை ஓட்ட வீடியோவில் உற்பத்திக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பதும் தெரிகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அகின் நிறுவனத்தின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. அதாவது, இது உடனடி தீர்வாகவே இருக்கும். அடுத்த ஆண்டு சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் ஆகிய போட்டியாளர்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. இந்த நிலையில், முக்கிய போட்டியாளராக மாறி இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அவசியமாகி இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளைவிட ரூ.40,000 வரை கூடுதல் விலையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.
Source:AutoLust Network


Click it and Unblock the Notifications








