மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் வெளியானது!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் மைலேஜ் உள்ளிட்ட சில முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம் ஏராளமான வரிசை கட்டி வருகிறது. அந்த வரிசையில், எக்ஸ்யூவி300 என்ற பெயரில் அடுத்து ஒரு புதிய மாடலை வரும் 14ந் தேதி விற்பனைக்கு களமிறக்க இருக்கிறது.

சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையிலான இந்த புதிய எஸ்யூவி மாடல் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி குறித்த புதிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது போட்டியாளர்களைவிட திறன்மிக்க மாடலாக இருக்கும்.

டீசல் மாடலானது லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த எஸ்யூவி ரக கார் பெட்ரோல் மாடலிலும் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலும் திறன் மிக்கதாகவும், லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தர வல்லதாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த புதிய எஸ்யூவியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் W4, W6, W8 மற்றும் W8 ஆப்ஷனல் ஆகிய 4 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








