மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஏஎம்டி மாடல் விரைவில் அறிமுகம்: விபரம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் லேட்டஸ்ட் வரவான புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மாதத்திற்கு 5,000க்கும் அதிகமான எக்ஸ்யூவி300 எஸ்யூவிகள் விற்பனையாகி வருகின்றன.

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், டீசல் மாடலில் விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருக்கிறது.

அதாவது, இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

எனினும், பெட்ரோல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு சில மாதங்கள் கழித்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் W4 பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து, பிற வேரியண்ட்டுகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அண்மையில் விளம்பர படத்திற்காக W8 ஏஎம்டி வேரியண்ட்டை வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்ட ஸ்பை படங்கள் வெளியானது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டைவிட ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டானது ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலான கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இத்தாலியை சேர்ந்த மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளை பெறப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 117 எச்பி பவரையும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 110 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

போட்டியாளர்களான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் வெனியூ கார்களின் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டால், விற்பனை கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








