உலக நாடுகளை ஆளப்போகும் இந்திய கார்... மஹிந்திரா நிறுவனத்தால் நாட்டிற்கு கிடைத்த பெருமிதம் இதுதான்...
இந்திய தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி300, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த தயாராகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) கார், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரின் விற்பனை இந்தியாவில் மிக சிறப்பாக உள்ளது. இதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

எக்ஸ்யூவி 300 காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே சர்வதேச மார்க்கெட்களிலும் விற்பனை செய்வதற்கு ஏற்ற மாடலாக இது கருதப்படுகிறது. எக்ஸ்யூவி 300 காரை சர்வதேச மார்க்கெட்களில் அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திரா நிறுவனத்திற்கும் இருந்து கொண்டுதான் உள்ளது.

தற்போது அந்த திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக தென் ஆப்ரிக்காவில், எக்ஸ்யூவி 300 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் உள்ள தனது டீலர்களுக்கு எக்ஸ்யூவி 300 காரை மஹிந்திரா நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது.

எனவே வெகு விரைவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு மற்ற முக்கியமான சர்வதேச மார்க்கெட்களை மஹிந்திரா நிறுவனம் குறி வைக்கவுள்ளது.

இதில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் நேபாளம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தென் கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி காரினுடைய X100 பிளாட்பார்ம் அடிப்படையில்தான் எக்ஸ்யூவி 300 கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் சாங்யாங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்யூவி 300 காரை விற்பனைக்கு அறிமுகம் தென் ஆப்ரிக்க மார்க்கெட் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

மஹிந்திரா நிறுவனத்திற்கு தென் ஆப்ரிக்காவில் விரிவான டீலர்ஷிப் நெட்வொர்க் உள்ளது. அங்கு சுமார் 60 மஹிந்திரா டீலர்ஷிப்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் எக்ஸ்யூவி 300 காரை தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் மிக எளிதாக விற்பனை செய்ய முடியும்.

இதுதவிர தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில் சாங்யாங் டிவோலி கார் விற்பனையில் இல்லை. எக்ஸ்யூவி 300 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தென் ஆப்ரிக்க மார்க்கெட்டை மஹிந்திரா நிறுவனம் தேர்வு செய்திருப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம்.

இந்திய மார்க்கெட்டில் தனது போட்டியாளர்களுக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மிக கடுமையான சவாலை அளித்து வருகிறது. தென் ஆப்ரிக்க மார்க்கெட்டிலும் எக்ஸ்யூவி 300 காரின் ஆதிக்கம் தொடரும் என மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

தென் ஆப்ரிக்க மார்க்கெட்டில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஸாடா சிஎக்ஸ்-3, ரெனால்ட் டஸ்டர், ரெனால்ட் கேப்சர் மற்றும் சுஸுகி விட்டாரா உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்காவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காருக்கான முன்பதிவு மற்றும் டெஸ்ட் டிரைவ் தற்போது தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக மஹிந்திரா நிறுவனம் இலவச எரிபொருள் வவுச்சர்களை வழங்குகிறது. அத்துடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருவதை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இதனிடையே எக்ஸ்யூவி 300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளிலும் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த கார் எஸ்210 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








