முதல்முறையாக சென்னையில் தரிசனம் கொடுத்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார்!
சென்னை புறநகர் பகுதிகளில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவி கார் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அருமையான டிசைன், ஆர்ப்பரிக்கும் வசதிகள், சிறப்பான இடவசதியுடன் பிரிமீயம் காம்பேக்ட் எஸ்யூவியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நேற்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த மாடலானது எக்ஸ்யூவி400 என்ற பெயரில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எஸ்யூவியானது சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போடு எடுக்கப்பட்ட படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனாக பார்க்கப்படும் இந்த எக்ஸ்யூவி400 மாடலானது எஸ்204 என்ற குறியீட்டுப் பெயரில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

உட்புறத்திலும் பல பிரிமீயம் அம்சங்களை பெற்றிருக்கும். தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், வாய்ஸ் அசிஸ்ட், நேரடி இன்டர்நெட் வசதி, ரியர் ஏசி வென்ட்டுகளை எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்புடன், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியைவிட சற்றே கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு நெருக்கடியை வழங்கும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
Spy Images Source: NDTV Auto


Click it and Unblock the Notifications








