மாருதி பலேனோ ஆர்எஸ் காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி... ஏன் தெரியுமா?
மாருதி பலேனோ ஆர்எஸ் காருக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலையில் இருந்து வரும் கார் மாடல் மாருதி பலேனோ. இந்த காரின் அதிசெயல்திறன் மிக்க மாடல் பலேனோ ஆர்எஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் செயல்திறன் மிக்க கார் பிரியர்களுக்கான சிறந்த பட்ஜெட் விலை மாடலாக இருந்து வருகிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி பலேனோ ஆர்எஸ் காருக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடியாக தள்ளுபடியை வழங்குகிறது மாருதி கார் நிறுவனம். இதற்கான காரணம் குறித்து வெளியானத் தகவல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக மாருதி நிறுவனம் பிற நிறுவனங்களை போல அதிக தள்ளுபடிகளை வழங்குவதில்லை. ஓடாத கார்களுக்கு மட்டும் முடிந்தவரை அதிகபட்சமான தள்ளுபடியை வழங்கும். இந்தநிலையில், மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் ரூ.1 லட்சம் நேரடியாக தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேம்படுத்தப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால், இருப்பில் உள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் கார்களை இந்த பண்டிகை காலத்திலேயே விற்றுத் தீர்த்துவிடுவதற்கு மாருதி முடிவு செய்துள்ளது.

இதனாலேயே, இவ்வளவு அதிகபட்ச மாருதி கார் நிறுவனம் வழங்குவது தெரிய வந்துள்ளது. இந்த விலை குறைப்பு நிச்சயம் மாருதி பலேனோ ஆர்எஸ் காரை வாங்க இருப்போருக்கு சிறப்பானதாக இருக்கும். அருகிலுள்ள மாருதி டீலரை தொடர்பு கொண்டு இந்த விலை குறைப்பை உறுதி செய்து கொள்வதும் நல்லது.

சாதாரண பலேனோ காரைவிட பலேனோ ஆர்எஸ் காரில் வெளிப்புறத்தில் பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளுடன் மிக வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத கார் மாடலாக இருக்கிறது.
Source: Team BHP


Click it and Unblock the Notifications








