சக்தி வாய்ந்த எஞ்ஜினுடன் மலிவான விலையில் களமிறங்கியுள்ள மாருதி செலிரியோ! இதோட விலை எவ்வளவு தெரியுமா?
சக்தி வாய்ந்த எஞ்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் மாருதியின் புதிய செலிரியோ கார்கள் விற்பனைக்காக இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

பட்ஜெட் ரக வாகனங்களைத் தயாரித்து வரும் மாருதி நிறுவனம், தனது புதிய மலிவான விலை மாடல் செலிரியோ கார்களை விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ரக கார் சந்தையில் இந்த மாடல் காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தான், மாருதி நிறுவனம் தனது புதிய தலைமுறை செலிரியோவின் இரண்டு மாடல் கார்களை இந்திய நான்கு சக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், மாருதி நிறுவனம் 2019 செலிரியோ மற்றும் 2019 செலிரியோ எக்ஸ் ஆகிய இரண்டு மாடல் கார்களை அறிமுகம் செய்திருப்பதாக கார்டெக்கோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த புதிய மாடல் செலிரியோ, மாருதியின் பலேனோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபன்று, இந்த புதிய மாடலை வருகின்ற அக்டோபர் மாதம் அமலுக்கு வர இருக்கிற புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைக்கு ஏற்பவும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு விதிக்கு ஏற்பவும் தயார் செய்திருப்பதாக மாருதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், செலிரியோவின் பக்கவாட்டில் ஏர்பேக், சீட்பெல்ட் மானிட்டர், பார்க்கிங் சென்சார் ஆகிய வசதிகள் தற்போது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் அரசின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களால், இந்த புதிய ஹேட்ச்பேக் கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, செலிரியோ வேரியண்ட் 3 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோன்று, செலிரியோ எக்ஸ் வேரியண்டானது, 4 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் உயர்வைப் பெற்றுள்ளது.

ஆகையால், இந்த கார்கள் எக்ஸ்-ஷோரூமில் ரூ. 4.80 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். மேலும், இது வேரியண்டிற்கு ஏற்ப மாறுதல் அடையும். இதைத்தொடர்ந்து, இந்த கார் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. அவ்வாறு, சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கும் விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ. 15 ஆயிரம் வரை உயர்வடைந்துள்ளது. இதேபோன்று, விஎக்ஸ்ஐ(ஓ) வேரியண்ட் ரூ. 7 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

இந்த புதிய மாடல் செலிரியோ ஹேட்ச்பேக் கார்கள் முந்தைய மாடலில் இருந்து பெரியளவில் மாற்றம் பெறாமல் சிறிய மாற்றங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2019 செலிரியோவின் இரண்டு மாடல் கார்களிலும் 998சிசி பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன.

இது 67 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 90என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-இல் வெளியிடும். இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த ரெகுலர் செலிரியோ காரும் சிஎன்ஜி எரிபொருளில் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இந்த கார் சாலையில் செல்லும்போது அதன் எஞ்ஜின் சக்தி குறையும் என கூறப்படுகிறது.
அதன்படி, சிஎன்ஜி-இல் கார் இயங்கும்போது 59 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 78 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். செலிரியோ சிஎன்ஜி வேரியண்டில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.79 கிமீ மைலேஜைக் கொடுக்கும் திறன் வாயந்தது.


Click it and Unblock the Notifications








