பல மாத எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகமானது மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி...
பல மாதங்களாக எதிர்பார்ப்பில் இருந்து வந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் காருடைய சிஎன்ஜி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் ரசிகர்களை குஷிப்படுத்துகின்ற வகையிலான ஓர் சம்பத்தை அரங்கேற்றியுள்ளது.
அந்தவகையில், இந்தியர்களின் பல மாதங்கள் எதிர்பார்ப்பாக நிலவி வந்த எர்டிகா மாடல் காரின் சிஎன்ஜி வேரியண்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிஎன்ஜி வேரியண்ட் எர்டிகா கார், தனியார் பயன்பாட்டிற்காக மட்டுமின்றி வாடகை கார் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் டூர் எம் மாடலில் களமிறக்கப்பபட்டுள்ளது.
ஆகையால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த எர்டிகா சிஎன்ஜி வேரியண்ட், தனியார் மற்றும் வாடகை கார் சேவையில், தனது முக்கிய பங்கினை அளிக்க இருக்கின்றது.

இதில், பாஸஞ்சர் செக்மெண்டிற்காக விஎக்ஸ்ஐ ட்ரிம் மாடலும், வர்த்தக துறைக்காக டூர் எம் மாடலிலும் இந்த எர்டிகா சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், விஎக்ஸ்ஐ ட்ரிம் 8,87,689 என்ற விலையிலும், டூர் எம் வேரியண்ட் ரூ. 8,82,689 என்ற விலையிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

சிஎன்ஜி ரகத்திலான எர்டிகா கார், சாதரண மாடல்களைக் காட்டிலும் ரூ. 65 விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. இந்த விலையுயர்விற்கு, உற்பத்தி பொருட்களின் அதிக விலையே காரணமாக இருக்கின்றது.
2019 மாருதி சுஸுகி சிஎன்ஜி வேரியண்டில் 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக, 103 எச் பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதே தரத்திலான எஞ்ஜினைத்தான் கமர்சியல் துறைக்காக களமிறக்கப்பட்டுள்ள டூர் எம் வேரியண்ட் பெற்றிருக்கின்றது. இந்த இரு கார்களும் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.2 கிமீ வரை செல்லும் என கூறப்படுகின்றது.

இந்தியாவின் பட்ஜெட் வாகன சந்தையை குறி வைத்து களமிறக்கப்பட்டிருக்கும் இந்த எர்டிகா சிஎன்ஜி மாடலில், பல்வேறு சிறப்பம்சங்களும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், பாதுகாப்பு வசதியாக ட்யூவல் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, பிரேக் அசிஸ்ட், எஞ்ஜின் இம்மொபிலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சார் லாக், சைல்ட் லாக் ரியர் டூர், பார்க்கிங் சென்சார், ஸ்டியரிங் மவுன்டட் கன்ட்ரோல்ஸ் உள்ளிட்ட ஏராளாமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், மேனுவல் ஏசி, ரியர் ஏர் வென்ட்ஸ், ஃபேப்ரிக் சீட்ஸ், பிளாக் மற்றும் பீச் நிறத்திலான இன்டீரியர், 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் இன்டெக்ரேடட் மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி, ப்ளூடூத், ஆக்ஸ் கம்பேடிபிளிட்டி, ரேடியோ, எம்ஐடி ஸ்கிரீனுடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த கார் இடம்பெற்றுள்ளது.

எர்டிகாவின் இந்த சிஎன்ஜி விஎக்ஸ்ஐ வேரியண்ட் 5 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், வெள்ளை, சிவப்பு, நீளம், மக்மா க்ரே, சில்வர் உள்ளிட்ட நிறங்களில் அவை தயார் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, சிஎன்ஜி வேரியண்ட் மூன்று கலர்களில் மட்டும் கிடைக்க இருக்கின்றது. அவ்வாறு, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் இவை சந்தையை கலக்க இருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனம், இந்த எர்டிகா எம்பிவி ரக காரிந் அடுத்த தலைமுறை மாடலை கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதாவது, முந்தைய மாடல் எர்டிகாவைக் காட்டிலும், புதிய தலைமுறை மாடல் எர்டிகா இரு மடங்கு விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றது. அந்தவகையில், பழைய மாடல் எர்டிகா மாடல் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 4,000 யூனிட்டுகளை விற்று வந்தநிலையில், புதிய தலைமுறை எர்டிகா ஒரு மாதத்தில் 8,000 யூனிட்டுகள் விற்பனையாகும் அளவிற்கு வளர்ச்சியைப் பெற்றது.

இந்த மிகப்பெரிய வெற்றிக்கு, முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய தலைமுறை எர்டிகா கார், அதிக நீளம், அதிக இட வசதி, கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றிருந்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இத்துடன், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினும் அதில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் மாருதி சுஸுகி நிறுவனம், எர்டிகாவின் சிஎன்ஜி வேரியண்டை இந்தியர்களுக்காக தற்போது அறிமுகம் செய்துள்ளது.

மேலும், இத்துடன் புதிய மாருதி எக்ஸ்எல்6 மாடலையும் அந்நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் எர்டிகாவின் க்ராஸ்ஓவர் மாடலாக களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், புதிய அலாய் வீல், அதிகளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங், புதிய தோற்றத்திலான முகப்பு பகுதி, ஆறு இருக்கை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்திய நான்கு சக்கர வாகன சந்தையை கலக்க களமிறங்க இருக்கின்றது. இந்த காரை அந்நிறுவனம் வருகின்ற ஆகஸ்டு 21ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








