அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது மாருதி எர்டிகா க்ராஸ் கார்?
கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வர இருக்கும் புதிய மாருதி எர்டிகா க்ராஸ் காரின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. கவரும் டிசைன், அதிக இடவசதி, புதிய எஞ்சின் தேர்வுகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசு மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மாருதி எர்டிகா க்ராஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தள செய்தி கூறுகிறது. மேலும், மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய மாருதி எர்டிகா க்ராஸ் காரில் வெளிப்புறத்தில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வசீகரமான அம்சங்களுடன் வருகிறது. முக்கிய விஷயமாக, நடு வரிசையில் பெஞ்ச் வகை இருக்கைக்கு பதிலாக இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட இருக்கின்றன.

இதனால், அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும். புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரூஃப் ரெயில்கள், புதிய முக அமைப்பு ஆகியவையும் சாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விஷயங்களாக இருக்கும்.

புதிய மாருதி எர்டிகா க்ராஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேலும், இந்த எஞ்சினுடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய மாருதி எர்டிகா க்ராஸ் மாடல் அதிக விலை கொண்ட மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. எனினும், இது சொகுசு அம்சங்கள் அதிகம் கொண்ட மாடலாகவும், மிடுக்கான தோற்றம் ஆகியவை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தரும் வாய்ப்புள்ளது. புதிய பெயரிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சந்தையிலிருந்து சற்று கூடுதலான விற்பனை பங்களிப்பை பெறுவதற்குமான வாய்ப்பாக இந்த மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மாருதி சுஸுகி. நிச்சயம் சரியான பட்ஜெட்டில், சிறந்த சொகுசு அம்சங்களை பெற்ற மாடலாக மாருதி எர்டிகா க்ராஸ் கார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








