சுஸுகி ஜிம்னி ஆஃப்ரோடு எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது மாருதி சுஸுகி?
புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு நான்காம் தலைமுறை சுஸுகி ஜிம்னி காம்பேக்ட் எஸ்யூவி வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு சாகசங்களுக்கு பெயர் பெற்ற மாடலாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையையும் பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக புதிய சுஸுகி ஜிம்னி சியாரா அடிப்படையிலான புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், சுஸுகி ஜிம்னி சியாரா அடிப்படையில் இந்தியாவுக்காக உருவாக்கப்படும் மாடலானது தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், சஸ்பென்ஷன் மற்றும் சொகுசு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

தற்போது ஜப்பானில் உள்ள சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஜிம்னி எஸ்யூவி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், வலது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடலானது குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது வெளிநாடுகளில் 660 சிசி டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ர்ோல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வரும். தற்போது இந்த எஞ்சின் சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படுகிறது.

மாருதி பிராண்டில் அறிமுகம் செய்யப்படும் இந்த எஸ்யூவியில் மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் என்பதால், மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

இதுவரை புதிய சுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், இந்த மாடல் அறிமுகம் குறித்த உறுதியானத் தகவல் விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Nikkei Asian Review


Click it and Unblock the Notifications








