வெறும் ரூ.3.69 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்!
ரூ.3.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ஸ்டான்டர்டு, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

விலை விபரம்
அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் வேரியண்ட்டுகளில் மட்டும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் வந்துள்ளது. டாப் வேரியண்ட் ரூ.5 லட்சத்திற்குள் இருக்குமாறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| Variant | Prices |
| STD | Rs 3,69,000 |
| LXI | Rs 4,05,000 |
| VXI | Rs 4,24,500 |
| VXI+ | Rs 4,48,000 |
| VXI AGS | Rs 4,67,500 |
| VXI+ AGS | Rs 4,91,000 |

எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்
புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கும்.. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மைலேஜ்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் ஸ்டான்டர்டு மற்றும் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜையும், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜையும், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தரம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட்டுகளில் ஒரு ஏர்பேக்கும், டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகளும் உள்ளன. தவிரவும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

பிளாட்ஃபார்ம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின்பேஸ் வேரியண்ட் 726 கிலோ எடை கொண்டது. மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட எடை குறைவானது. மாருதி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் எஸ் பிரெஸ்ஸோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கிரவுண்ட் கிளிரயன்ஸ்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் எஸ்யூவி போன்ற வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. அத்துடன், பிளாஸ்டிக் பம்பர், பிளாஸ்டிங் கிளாடிங் சட்டங்கள், வலிமையான பானட் அமைப்பு என கவர்கிறது. அதாவது, மிக குறைவான விலை மைக்ரோ எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

பரிமாணம்
புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,565 மிமீ நீளமும், 1,520 மிமீ அகலமும் பெற்றிருக்கிறது. மாருதித ஆல்ட்டோ கே10 காரைவிட நீளத்தில் 120 மிமீ வரையிலும், அகலத்தில் 5 மிமீ வரையிலும் கூடுதலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,380 மிமீ ஆக உள்ளது.

அலாய் வீல்கள் இல்லை
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் அலாய் வீல்கள் இல்லை. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 அங்குல ஸ்டீல் வீல்களும், உயர் வகை வேரியண்ட்டுகளில் 14 அங்குல ஸ்டீல் வீல்களும் உள்ளன.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பை பெற்றிருக்கிறது.

இதர அம்சங்கள்
மினி பிராண்டின் பிரிமீயம் கார்களை நினைவூட்டுவது போன்ற சென்ட்ரல் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ரகத்தில் முதல்முறையாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ சுவிட்டுகள் கொடுக்கப்பட்ட முதல் கார் மாடலாக வந்துள்ளது. ஹெட்ரெஸ்ட்டுகளில் அட்ஜெஸ்ட் வசதி இல்லை. 12 வோல்ட் சார்ஜர், கப் ஹோல்டர்கள், அதிக இடவசதியுடன் கூடிய இன்டீரியர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

வண்ணத் தேர்வுகள்
புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் சிவப்பு (சாலிட் ஃபயர் ரெட்), நீலம் (பியர்ல் ஸ்டாரி புளூ), ஆரஞ்ச் (சாலிட் சிஸில் ஆரஞ்ச்), சாம்பல் (மெட்டாலிக் கிரானைட் க்ரே) சில்வர் (சில்க்கி சில்வர்) மற்றும் வெள்ளை (சுப்பீரியர் ஒயிட்) ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புக்கிங்
புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரை ரூ.11,000 முன்பணம் செலுத்தி ஆன்லைன் மூலமாக அல்லது டீலர்கள் வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காருக்கான டெலிவிரியும் உடனடியாக துவங்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








