மாருதியின் அடுத்த 'தகர டப்பா' ரெடி... எஸ் பிரெஸ்ஸோ குறித்து சமூக வலைதளங்களில் செம கிண்டல்!
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் ஸ்பை வீடியோவை இணையதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஆனால், இந்த காரை பார்த்த பலரும் ஏகத்துக்கும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ என்ற மைக்ரோ எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. வரும் 30ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய காரின் டீசர்களை மாருதி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், மாருதியின் டீலர் யார்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய எஸ் பிரெஸ்ஸோ காரை வீடியோ எடுத்து யூ-ட்யூபில் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவை ஆட்டோமொபைல் இணையதளங்களில் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலர் மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். மாருதியிடமிருந்து அடுத்த தகர டப்பா ரெடி என்பது போல சிலர் கலாய்த்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட கல்லூரியில் படித்த பொறியாளர்தான் இந்த காரின் டிசைனராக இருக்கக்கூடும் என்று கலாய்த்துள்ளார். இது 50 ஆண்டுகளுக்கு முன் வர வேண்டிய கார் என்று சிலர் போட்டு தாக்கி வருகின்றனர்.

இருப்பினும், ஒரு சிலர் மட்டுமே இந்த விலையில் மாருதியிடமிருந்து வரும் மதிப்பு வாய்ந்த கார் மாடலாக எதிர்பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றனர். புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மைக்ரோ எஸ்யூவி ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், முகப்பில் கம்பீரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. பிளாஸ்டிக் பம்பர்கள், ரூஃப் ரெயில்களுடன் வாடிக்கையாளர்களை கவரும். ஆனால், இந்த காரில் ஸ்டீல் வீல்கள்தான் வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதேநேரத்தில், உட்புறத்தில் அதிக இடவசதியை இந்த கார் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், மாருதி வேகன் ஆர் போன்றே, இந்த கார் டால் பாய் டிசைன் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டு இருப்பதும் பார்த்தவுடனே தெரிகிறது.

அத்துடன், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி வசதிகளும் எதிர்பார்க்கப்படுவதால், பட்ஜெட் கார் வாங்க உள்ளோருக்கு அதிக மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும்.

மாருதி கார்களை தகர டப்பா என்று வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்தாலும், இந்த கார் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களை பெற்றிருக்கும். அத்துடன், டிரைவர் பக்கத்திற்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மற்றொரு ஹைலைட்டாக, மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது. ரூ.3.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Power Stroke PS


Click it and Unblock the Notifications







