மாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கு ரகசிய முன்பதிவு?
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரை வாங்க ஆர்வமாக உள்ளோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் மைக்ரோ எஸ்யூவி ரகத்தில் பட்ஜெட் கார் மாடலாக வர இருக்கிறது. இந்த கார் அறிமுகம் குறித்து மாருதி மவுனம் காத்து வருகிறது. இந்த கார் ரெனோ க்விட் காருக்கு போட்டியாக, எஸ்யூவி ஸ்டைலில் இருப்பதால் வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டி இருக்கிறது.

இந்த கார் குறித்து நித்தமும் ஒரு புதிய தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த காருக்கான முன்பதிவு குறித்து டீலர்களில் போட்ட விசாரணையில், அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்னும் துவங்கப்படவில்லை. வரும் 25ந் தேதி வாக்கில் அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்படும் என்று தெரிவித்தனர்.

எனினும், சில டீலர்களில் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை விபரத்தை பெற்று பதிவு செய்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கும்போது, இந்த பெயர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று டீலரை சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கார் மிகவும் குறைவான விலையில் வர இருப்பதால் அதிக ஆவல் நிலவுகிறது. இந்த கார் 4 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் ஏராளமான சிறப்பு அம்சங்களும், தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற இருக்கின்றன.

ரெனோ க்விட் காருக்கு போட்டியாக வரும் இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரட்டை வண்ண இன்டீரியர் தீம் ஆகியவை இடம்பெற இருப்பது வாடிக்கையாளர்களின் ஆவலை கிளறியுள்ளது.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் வேகன் ஆர் கார்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








