மலிவான விலையில் புரட்சி... மாருதி சுஸுகி ஏஎம்டி கார்களுக்கு இந்தியர்கள் வேகமாக மாற காரணம் இதுதான்...
மலிவான விலையில் புரட்சி செய்ததால், மாருதி சுஸுகி ஏஎம்டி கார்களுக்கு இந்தியர்கள் வேகமாக மாறி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முன்னணி இடத்தை வகித்து வரும் ஒரு நிறுவனம் மாருதி சுஸுகி. ஏஎம்டி எனப்படும் மிகவும் மலிவான விலை ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது. எண்ட்ரி-லெவல் கார்களில் இந்த ஆப்ஷனை வழங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையும் மாருதி சுஸுகிக்கு உண்டு.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கார்களில், ஏடி (AT - Automatic Transmission), சிவிடி (CVT - Continuously Variable Transmission) மற்றும் ஏஎம்டி ( AMT - Automated Manual Transmission) என மூன்று விதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், தனது ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை ஆட்டோ கியர் ஷிப்ட் அல்லது சுருக்கமாக ஏஜிஎஸ் (AGS - Auto Gear Shift) என்று மாருதி குறிப்பிடுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஏஜிஎஸ் ஆப்ஷனை கடந்த 2014ம் ஆண்டுதான் முதல் முறையாக செலிரியோ காரில் அறிமுகம் செய்தது. அதன்பின்பு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ கே10, வேகன் ஆர், ஸ்விப்ட், இக்னிஸ், டிசையர் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவற்றிலும் ஏஜிஎஸ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டது.

மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில், க்ளட்ச் இயக்கம் மட்டும் எலெக்ட்ரோ ஹைட்ராலிக் சிஸ்டம் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதான் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) என்று அழைக்கப்படுகிறது.

காரின் வேகத்தையும், ஆக்சிலரேட்டர் பெடல் இருக்கும் நிலையையும் வைத்து, டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் யூனிட் மூலமாக வேகத்துக்கு தக்கவாறு கியர் மாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது, ஓட்டுனர் க்ளட்ச்சை கட்டுப்படுத்தும் வேலையை டிசியூ யூனிட்டானது ஹைட்ராலிக் சிஸ்டத்திற்கு சிக்னல்களை கொடுத்து கியர் மாற்றத்தை நிகழ்த்துகிறது. க்ளட்ச் சிஸ்டம் இருக்கும்.

ஆனால், க்ளட்ச் பெடல் இருக்காது. இதனால், இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காரை ஓட்டும் அதே வசதியை அளிக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களானது மேனுவல் கியர் பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்குவதுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களுக்கு நிகரான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், விலையும் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை விட சற்றே அதிகம்.

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டுவதற்கும், அதிக எரிபொருள் சிக்கனத்துடன் சரியான விலையில் கிடைப்பதும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்களுக்கான வரவேற்பை வெகுவாக அதிகரித்துள்ளது. கியரை மாற்றும் வேலை, கிளட்ச் பெடலை மிதித்து கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் தவிர்க்கிறது. எனவே டிரைவர்கள் சாலையில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பும் அதிகரிக்கும். டிரைவர்களின் கவனம் சாலை மீது கூடுதலாக இருக்கும்.

குறிப்பாக இதன் நன்மையை மலை பிரதேசங்களில் உங்களால் நன்றாக உணர முடியும். மலை பிரதேசங்களில் கூரான திருப்பங்களும், கொண்டை ஊசி வளைவுகளும் உங்கள் முன்னே திடீர் திடீரென வரும். இதன் காரணமாக கியரை மாற்றி மாற்றிதான் காரை ஓட்ட வேண்டியதிருக்கும்.

ஆனால் இந்த நேரத்தில், கியர் ஷிப்ட் மற்றும் கிளட்ச்சை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் கவனித்து கொள்ளும். எனவே திருப்பங்கள் அதிகம் நிறைந்த மலை சாலைகளில் டிரைவர்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

ஆனால் செங்குத்தான மலை சாலைகளில், கியரை மாற்றும் பொறுப்பு நம்மிடமே இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என நினைக்க கூடிய டிரைவர்களும் இருக்கிறார்கள். இதற்காக மாருதி சுஸுகி ஏஜிஎஸ் கியர் பாக்ஸ், மேனுவல் மோடு ஆப்ஷனையும் வழங்குகிறது.

மேனுவல் மோடில், ஏஜிஎஸ் சிஸ்டம் Sequential கியர் பாக்ஸ் ஆக செயல்படும். கியரை மாற்றுவதற்காக டிரைவர்கள் கியர் ஷிப்ட்டரை அப் அல்லது டவுன் செய்யும்போது, கிளட்ச்சை ஹைட்ராலிக் கவனித்து கொள்ளும். இதன் மூலம் டிரைவர்கள் தங்கள் விருப்பம் அல்லது தேவைக்கு ஏற்ப கியரை தேர்ந்து எடுத்து கொள்ள முடியும்.

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மற்றொரு விஷயம் விலை. குறைவான விலையில் தரமான தயாரிப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்திய வாடிக்கையாளர்களின் முக்கியமான எதிர்பார்ப்பு. மாருதி சுஸுகி நிறுவனம் இங்கு அதனை செவ்வனே செய்து கொண்டுதான் உள்ளது.

இந்த வரிசையில் அதன் ஏஜிஎஸ் தொழில்நுட்பமும் வாடிக்கையாளர்களின் பர்சுக்கு எவ்வித பங்கத்தையும் உண்டாக்காது. ஒரு காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டின் விலையை காட்டிலும், ஏஜிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.50 ஆயிரம் மட்டுமே அதிகம்.

கூட்டி கழித்து பார்த்தால் இந்த கணக்கு சரியாகதான் வரும். மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கூடிய கார் வழங்கும் அதே மைலேஜைதான் ஏஜிஎஸ் கியர் பாக்சும் வழங்குகிறது. இதுதவிர எந்நேரமும் கியரை மாற்றி கொண்டு, கிளட்ச்சை மிதித்து கொண்டிருக்க வேண்டிய தொல்லையும் கிடையாது.

உண்மையில் ஏஜிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆட்டோமெட்டிக் கார்களை பயன்படுத்துவதும் எளிதுதான். பராமரிப்பதும் எளிதுதான். மேனுவல் வேரியண்ட் கார்களுடன் ஒப்பிடுகையில், ஏஜிஎஸ் கார்களின் விலையும் மிக அதிகம் என்றும் சொல்ல முடியாது. இதனால்தான் இந்தியர்கள் வேக வேகமாக மாருதி சுஸுகி ஆட்டோமெட்டிக் கார்களுக்கு மாறி கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








