ஆல்டோவில் புதிய வேரியண்ட் அறிமுகம்... மாருதி சஸுகி அதிரடி... விலை எவ்வளவு தெரியுமா..?
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பட்ஜெட் விலைக் கொண்ட மாடலான ஆல்டோவில் புதிய வேரியண்டை, புதிய சிறப்பம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி, அதன் பட்ஜெட் ரக காரான ஆல்டோவில் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.
விஎக்ஸ்ஐ+ என்ற ட்ரிம்மில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காருக்கு ரூ. 3,80,209 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ இருக்கின்றது. அதேசமயம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களிலும் ஆல்டோ முதன்மை வகிக்கின்றது. இந்த கார், 800 சிசி மற்றும் 1000சிசி வரையிலான எஞ்ஜின் திறனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்நிலையில், ஆல்டோ 800சிசி திறனில் இந்த புதிய ட்ரிம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தம் புதிய மாடலில் கூடுதல் சிறப்பு வசதியாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஸ்மார்ட்பிளே 2.0 வெர்ஷனிலான 7.0 இன்ச் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டத்தை புதிதாக இணைத்துள்ளது.

முன்னதாக, இந்த அம்சத்தை 2019 வேகன் ஆர், புதுப்பிக்கப்பட்ட பலினோ, சியாஸ், ஸ்விஃப்ட், டிசையர் உள்ளிட்ட மாடல்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆனால், தற்போது ஆல்டோவிலும் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இது ஆல்டோ பிரியர்களை மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், ஆல்டோவின் ஆரம்பநிலை மாடல்களில் தற்போது வரை ஸ்மார்ட்பிளே மொபைல் டாக்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, ஸ்மார்ட்போன் வழியாக ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ வசதியை பயன்படுத்திக் கொள்ள உதவும்.

ஆல்டோவின் புதுப்பிக்கப்பட்ட 800 மாடலை நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இது, புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 மற்றும் பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவற்றை சந்திக்கின்ற வகையிலான அப்டேட்டைப் பெற்றிருக்கின்றது.

புதிய ஆல்டோ விஎக்ஸ்ஐ ப்ளஸ் 800 காரில் 796 சிசி திறன் கொண்ட 3-சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரத்திலான இந்த எஞ்ஜின் 6,000 ஆர்பிஎம்-மில் 47 பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்-மில் 69 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

மேலும், இந்த எஞ்ஜின் அதன் பழைய மாடலில் உள்ள எஞ்ஜினைக் காட்டிலும் 25 சதவீதம் குறைவான நைட்ரஜன் ஆக்ஸைடை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.
தொடர்ந்து, இந்த காரில் உள்ள பெரும்பாலான பாகங்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மீட்கக்கூடிய மற்றும் 85 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய கூறுகளுடன் காணப்படுகின்றது.

மேலும், புதிதாக அமலுக்குள்ளாக இருக்கும் புதிய பாதுகாப்பு விதியை சந்திக்கின்ற வகையில், காரின் முன் பக்கத்தில் ஏர் பேக், இபிடி வசதியுடன் கூடிய ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட ஏராளாமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகியின் இந்த புதிய வேரியண்ட் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் 0.8 மாடலுக்கு போட்டியளிக்கின்ற வகையில் அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications