அதிரடியாக விலையை குறைத்த மாருதி சுஸுகி: கடும் அதிர்ச்சியில் போட்டி நிறுவனங்கள்!
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையைக் கணிசமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையினால் போட்டி நிறவனங்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுஸுகி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையைக் கணிசமாக குறைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலங்களாக நிலவி வரும் மந்த நிலை மற்றும் வரவிருக்கும் விழாக் காலங்களை சிறப்பிக்கும் விதமாக விலை குறைப்பு நடவடிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பொதுவாக இந்தியர்கள் விழாக் காலங்களில் புதிய பொருட்களை வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆகையால், சிறப்பு சலுகைமூலம் வரும் பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களைக் கவரும் விதமாக, குறிப்பிட்ட மாடல்களின் விலையில் இருந்து ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், மத்திய நிதியமைச்சர் பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததன் பேரில் இந்த தரமான சம்பவத்தை மாருதி செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை கணிசமாக குறைக்கும் விதமாக, மத்திய அரசு இந்த வரி குறைப்பினைச் செய்துள்ளது. ஆகையால், தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கம் சற்று தளர்வு காண வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக, கடந்த இரு நாட்களாக பரீசிலிக்கப்பட்டு வந்த விலை குறைப்பு நடவடிக்கை, செப்டம்பர் 25 (இன்று) முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

அந்தவகையில், மாருதியின் பிரபல மாடல்களான ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசையர் டீசல், டூர் எஸ் டீசல், விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய மாடல் கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம், "விலைக் குறைப்பானது, முன்னதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையுடன் சேர்ந்தே பொதுமக்களுக்கு கிடைக்கும். இது, ஆரம்பநிலை வாடிக்கையாளர்களை மிகப் பெரியளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பண்டிகைக் காலங்களில் புதிய வாகனங்களை மலிவான விலையில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலனளிக்கும்" என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications







