அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...
மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து 8வது மாதமாக வாகன உற்பத்தியை குறைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருகிறது. இதனால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்களின் கார் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இதற்கு விதிவிலக்கல்ல.

விற்பனை சரிவு காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக உற்பத்தியை குறைத்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் தனது உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்து கொண்டுள்ளது. தொடர்ந்து 8வது மாதமாக மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தியை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 1,32,199 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,60,219 வாகனங்களாக இருந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,30,264 பாசஞ்சர் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,57,659 பாசஞ்சர் வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. இது 17.37 சதவீத வீழ்ச்சியாகும். அதே சமயம் ஆல்டோ, புதிய வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசையர் உள்ளிட்ட கார்களை உள்ளடக்கிய மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தி 14.91 சதவீதம் குறைந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 98,337 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,15,576 ஆக இருந்தது. அதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுடிலிட்டி வாகனங்களினுடைய உற்பத்தியும் 17.05 சதவீதம் குறைந்துள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் உள்ளிட்ட கார்கள் யுடிலிட்டி செக்மெண்ட்டில் வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுடிலிட்டி செக்மெண்ட்டில் 22,226 கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,435 ஆக குறைந்துள்ளது.

இந்த வரிசையில் மிட்-சைஸ் செடான் சியாஸின் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 2,350 சியாஸ் கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 4,739ஆக இருந்தது. அதேபோல் லைட் கமர்ஷியல் வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 2,560 சூப்பர் கேரி வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,935ஆக சரிவடைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது உற்பத்தியை 33.99 சதவீதம் குறைத்திருந்தது.

அப்போது 1,11,370 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. மாருதி சுஸுகி மட்டுமல்லாது தற்போது பல்வேறு நிறுவனங்களும் இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்தான் உள்ளன. ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








