மாருதி சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் சோதனை ஓட்டம்!
மாருதி சுஸுகி எர்டிகா ஸ்போர்ட் மாடல் எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பை வீடியோ மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலுக்கு அதீத வரவேற்பு இருந்து வருகிறது. மிகச் சரியான விலையில் 7 சீட்டர் மாடலாக இருப்பதே இதன் முக்கிய பலமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்கள் நிறைந்த எர்டிகா ஸ்போர்ட் கார் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், இந்த மாடல் இந்தியா வருமா என்று கேள்வி இருந்து வந்தது. அதற்கு விடை அளிக்கும் விதத்தில் தற்போது எர்டிகா ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாருதி எர்டிகா ஸ்போர்ட் மாடலில் 2+2+2 என்ற மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. மேலும், இந்த 6 இருக்கைகளும் மிக சொகுசான அமைப்புடன் இருக்கும் என்பதால், இன்னோவா மார்க்கெட்டை நேரடியாக குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

அதாவது, அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதுடன், பட்ஜெட் பிரச்னை இருப்பவர்களுக்கும் சொகுசான மாடலாக இருக்கும்.

சாதாரண எர்டிகா காரிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் இந்த மாடலில் புதிய பம்பர் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஹெட்லைட், க்ரில் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய 15 அங்குல அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இந்த காரில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உட்புற கூரையில் பீஜ் வண்ண ரூஃப்லைனர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இது நிச்சயம் சொகுசு எர்டிகா காரை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அடுத்த சில மாதங்களில் புதிய மாருதி எர்டிகா ஸ்போர்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரில் டூரிங் ஸ்போர்ட் மாடல் போலவே, எர்டிகா காரின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட் மாடலாக நிலைநிறுத்தப்படும்.
Source: Cartoq editor


Click it and Unblock the Notifications








