மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் பிஎஸ்-VI மாடல் எப்போது அறிமுகம் செய்யப்படும்? புதிய தகவல்கள்...
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் பிஎஸ்-VI மாடல் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது முதல் பிஎஸ்-VI (BS-VI) மாடலை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யும் என கடந்த 2019ம் ஆண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது Bloomberg Quint வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பார்த்தால், வரும் 2019ம் ஆண்டு ஜூன் மாதமே தனது முதல் பிஎஸ்-VI மாடலை அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருவது தெரிகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் லைன் அப் மிகவும் பெரியது. அந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களையும் உடனடியாக பிஎஸ்-VI மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். எனவே பிஎஸ்-VI விதிமுறைகளுக்கு மாறுவதற்கான பணிகளை சற்று முன் கூட்டியே தொடங்குவதே நல்லது என மாருதி சுஸுகி கருதுவதாக கூறப்படுகிறது. பிஎஸ்-VI விதிமுறைகளுக்கு மாறுவதற்கான காலக்கெடு 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா சமீபத்தில் Bloomberg Quint செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், ''எங்களிடம் உள்ள மாடல்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. சில மாடல்களின் பிஎஸ்-VI வெர்ஷன்களை ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிமுகம் செய்ய தொடங்குவதே, சட்டத்திற்கு நாங்கள் இணங்குவதை உறுதி செய்து கொள்ள இருப்பதற்கான ஒரே வழி'' என்றார்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டம்தான் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு ஆகும். எனவே வரும் ஜூன் மாத வாக்கில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் பிஎஸ்-VI மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் மாருதி சுஸுகியின் பிஎஸ்-VI வெர்ஷன் மார்க்கெட்டில் வரிசை கட்டி களமிறங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே மாருதி சுஸுகி நிறுவனமானது பிஎஸ்-VI பெட்ரோல் மாடல்களைதான் முதலில் வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலுக்கு பிறகுதான் பிஎஸ்-VI டீசல் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி தவிர இந்தியாவின் அனைத்து வாகன நிறுவனங்களும், மிக கடுமையான பிஎஸ்-VI மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், தங்கள் மாடல்களின் இன்ஜின்களில் மாற்றங்களை செய்து வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பிஎஸ்-6 மாடல்கள் தற்போதே விற்பனைக்கும் வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே தனது கார்களை பாதுகாப்பானதாக மாற்றும் வேலைகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் செய்து வருகிறது. இதன்படி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் கட்டாயமாகவுள்ள சில புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகம் செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications