மாருதி கார் ஆலைகளில் உற்பத்தி இல்லா நாட்கள் அறிவிப்பு
மாருதி நிறுவனத்தின் கார் ஆலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதனால், பொருளாதார இழப்பும், வேலைவாய்ப்பும் பறிபோய் வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதியின் விற்பனை தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து மாருதி கார் விற்பனை சரிந்து வருகிறது. இதனால், மாருதி கார் நிறுவனம் பெரும் கவலை அடைந்துள்ளது.

பொருளாதார இழப்பை தாக்குப்பிடிக்கும் விதத்தில், தற்காலிக தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டது. மாருதி கார் டீலர்களில் இருப்பு அதிகரித்து வருவதை குறைக்கும் விதமாக, கடந்த இரு மாதங்களாக உற்பத்தி இல்லா நாட்களை அந்நிறுவனம் கடைபிடித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதமும் மாருதியின் கார் விற்பனை 33 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதனால், இருப்பு தேங்குவதை தவிர்க்கும் நோக்கில், இரண்டு நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைக்க உள்ளது மாருதி கார் நிறுவனம். வரும் 7 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களும் உற்பத்தி இல்லா நாட்களும் கடைபிடிக்கப்பட உள்ளது.

பண்டிகை காலத்தில் கார் விற்பனை ஏற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாருதி நிறுவனம் இந்த மாதமும் கார் உற்பத்தியை இரண்டு நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது. டெல்லி அருகே உள்ள மானேசர் மற்றும் குர்கான் பகுதிகளில் இயங்கி வரும் இரண்டு கார் ஆலைகளிலுமே உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட இருக்கிறது.

இதனால், அந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி, வரும் மாதங்களில் கார் விற்பனை சற்று எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையுடன் கார் நிறுவனங்களும், டீலர்களும் காத்திருக்கின்றனர்.

மாருதியின் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று மாருதியின் பங்கு விலை மதிப்பு 2.47 சதவீதம் குறைந்து ரூ.5,900. 25 என்ற விலைக்கு வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications








