9 மாதங்களாக குறைந்து கொண்டே வந்த உற்பத்தி... ஆனா இப்போ மாருதி சுஸுகி ஹேப்பி... ஏன் தெரியுமா?
9 மாதங்களுக்கு பிறகு மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு 2019 மிகவும் மோசமான ஆண்டாக அமைந்து விட்டது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறையில் கடுமையான மந்தநிலை நிலவி வருகிறது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. விற்பனை சிறப்பாக இல்லாத காரணத்தால், பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன.

இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் ஒன்று. டிமாண்ட் இல்லாத காரணத்தால், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து உற்பத்தியை குறைத்து கொண்டே வந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 20.7 சதவீதம் என்ற அளவிற்கு உற்பத்தியை குறைத்தது.

அந்த மாதத்தில் 1,19,337 வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்தது. இதேபோல் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்திருந்தது. செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,32,199 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

தொடர்ந்து 9 மாதங்கள் உற்பத்தியை குறைத்த சூழலில், கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 4.33 சதவீதம் என்ற அளவிற்கு உற்பத்தியை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,41,834 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,35,946 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

பாசஞ்சர் வாகனங்களின் உற்பத்தியை பொறுத்தவரை, மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் 1,39,084 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,34,149 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. அதாவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் பாசஞ்சர் வாகனங்களின் உற்பத்தி 3.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆனால் ஆல்டோ, புதிய வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசையர் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் உற்பத்தி 20.16 சதவீதம் குறைந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 30,129 கார்களை உற்பத்தி செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த செக்மெண்ட்டில் 24,052 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது. எனினும் விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்களின் உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் நடப்பாண்டு நவம்பர் மாதம் 27,187 வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது.

ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த செக்மெண்ட்டில் 23,038 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. அதேபோல் மிட்-சைஸ் செடான் காரான சியாஸின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,830 சியாஸ் கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 1,460 சியாஸ் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.

இதே வரிசையில் லைட் கமர்ஷியல் வாகனமான சூப்பர் கேரியும் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 1,797 சூப்பர் கேரி வாகனங்களை மட்டுமே மாருதி சுஸுகி உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,750 சூப்பர் கேரி வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








