மாருதி எஸ் க்ராஸ் காரில் பெட்ரோல் மாடல் அறிமுகமாகிறது!
மாருதி எஸ் க்ராஸ் காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காக மாருதி நிறுவனம் களமிறக்கிய எஸ் க்ராஸ் கார் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. கடந்த 2017ல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல்கூட போதிய பலனை அளிக்கவில்லை.

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார்களுக்கு மத்தியில் எஸ் க்ராஸ் எடுபடாமல் போனது. இந்த சூழலில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக, டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுக்கு முடிவு கட்டுவதற்கு மாருதி முடிவு செய்துள்ளது.

தற்போது மாருதி எஸ் க்ராஸ் காரில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சினை ஃபியட் நிறுவனம் மேம்படுத்த விரும்பவில்லை என தெரிகிறது. இதையடுத்து, பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் எஸ் க்ராஸ் காரை அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை எஸ் க்ராஸ் காரிலும் பயன்படுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். மேலும், மாருதியின் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இந்த காரிலும் இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் பல மாருதி கார்களில் பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் மாருதி எஸ் க்ராஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








