மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கான முன்பதிவு தொடங்கியது... வரும் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் காருக்கான முன்பதிவு தற்போது இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம்.

எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ புதுவரவு. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்த ‘Future-S' கான்செப்ட் அடிப்படையில், எஸ்-பிரெஸ்ஸோ கார் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ காரை இந்திய மார்க்கெட்டில் வரும் செப்டம்பர் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு மேலாக புதிய எஸ்-பிரெஸ்ஸோ ஹேட்ச்பேக் நிலைநிறுத்தப்படும். அத்துடன் ரெனால்ட் க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ கார்களுடன் இது போட்டியிடும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் முற்றிலும் புதிய டிசைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுதவிர பல்வேறு வசதிகளும் இடம்பெறவுள்ளன.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையான 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் எஸ்-பிரெஸ்ஸோதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது.

அதே சமயம் எஸ்-பிரெஸ்ஸோ காரின் டாப் வேரியண்ட்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏஜிஎஸ் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்களுடனும் வரவுள்ளன. எஸ்-பிரெஸ்ஸோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் சாலை சோதனைகளுக்கு உட்படுத்திய ஸ்பை படங்கள் பல முறை வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சமீபத்திய ஸ்பை படங்கள் மூலம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் டீலர்ஷிப்களுக்கு வந்து கொண்டிருக்கும் தகவலை அறிய முடிகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே எஸ்-பிரெஸ்ஸோ காரின் டெலிவரிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தொடங்கி விடும் என்பதை இவை உணர்த்துகின்றன.

இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது.

இந்த சூழலில் களமிறங்கவுள்ள எஸ்-பிரெஸ்ஸோ மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் 3.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








