இக்கட்டான நிலையில் மாருதி... 2 தொழிற்சாலைகளில் உற்பத்தியை ரகசியமாக நிறுத்தியதற்கு காரணம் இதுதான்...
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இரண்டு முக்கியமான தொழிற்சாலைகளில் ஒரு நாள் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Associations) வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கார் விற்பனை சரிவடைந்து கொண்டே வருகிறது.

பர்சனல் வாகன செக்மெண்ட்டில் வாகனங்களின் விற்பனையானது, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதம் குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திணறலுக்கு ஆளாகியுள்ளன.

குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தியை 10 சதவீதம் என்கிற அளவிற்கு குறைத்து விட்டது.

விற்பனை மந்தம் மற்றும் கையிருப்பில் உள்ள கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால்தான் மாருதி சுஸுகி இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் இதே காரணங்களுக்காக உற்பத்தி குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் மற்றும் மனேசர் ஆகிய இடங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிளாண்ட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 பிளாண்ட்களிலும் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரு ஆண்டுக்கு 15.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இதனிடையே குர்கான் மற்றும் மனேசர் பிளாண்ட்களில் மாருதி சுஸுகி நிறுவனம் நேற்று ஒரு நாள் (மே 27) மட்டும் உற்பத்தியை திடீரென நிறுத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 2 பிளாண்ட்களை சேர்ந்த ஊழியர்களுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பிஸ்னஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. கையிருப்பில் உள்ள சரக்குகளின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது தொடர்பாக கருத்து கேட்க மாருதி சுஸுகி நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த விவகாரம் தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications







