டொயோட்டாவுக்கு க்ளான்ஸா கார் சப்ளையை துவங்கியது சுஸுகி!
டொயோட்டா நிறுவனத்திற்கு க்ளான்ஸா கார் சப்ளையை சுஸுகி நிறுவனம் துவங்கி இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் சில பிரபல கார் மாடல்களை டொயாோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதன்படி, முதல் மாடலாக பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் டொயோட்டா பிராண்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

க்ளான்ஸா என்ற புதிய பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் உற்பத்தி அண்மையில் குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில் துவங்கியது. இந்த நிலையில், முதல் லாட்டில் 364 க்ளான்ஸா கார்களை டொயோட்டா நிறுவனத்திற்கு சப்ளை செய்துள்ளது சுஸுகி நிறுவனம்.

இதனையடுத்து, நாடு முழுவதும் பெரு நகரங்களில் உள்ள டொயோட்டா டீலர்களில் க்ளான்ஸா காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் அடுத்த சில தினங்களில் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டீலர் அளவிலான முன்பதிவும் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய டொயோட்டா க்ளான்ஸா கார் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடல் என்பதால் ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், முகப்பு க்ரில் அமைப்பு, டொயோட்டா லோகோ, க்ளான்ஸா பெயருக்கான பேட்ஜ் மற்றும் வேரியண்ட் பேட்ஜ் ஆகியவை மட்டுமே புதிதாக தெரிகின்றன. புதிய அலாய் வீல்கள் மற்றும் இன்டீரியரில் சிறிய மாற்றங்களுடன் வர இருக்கிறது.

மாருதி பலேனோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், டொயோட்டா க்ளான்ஸா கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வர இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டொயோட்டா க்ளான்ஸா காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோவில் வழங்கப்படும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுமா என்பது அறிமுகத்தின்போதே தெரிய வரும்.

மாருதி பலேனோ காரில் பயன்படுத்தப்படும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இதிலும் இடம்பெற இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

டொயோட்டா க்ளான்ஸா கார் ஜி மற்றும் வி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே வர இருக்கிறது. மாருதி பலேனோ காரில் வழங்கப்படும் இரண்டு பேஸ் வேரியண்ட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. ரூ.7.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications