யூஸ்டு கார் சந்தையிலும் மாருதி நிறுவனம் ஆதிக்கம்!
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி கார் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் நேரடியாக களமிறங்கியது. புதிய கார் விற்பனைக்கு நிகரான வர்த்தக வாயப்புள்ள இந்த சந்தையிலும் மாருதி நிறுவனம் ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்கிறது.

மாருதி ட்ரூ வேல்யூ என்ற பெயரில் வர்த்தகத்தை துவங்கி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது மாருதி கார் நிறுவனம். புதிய கார் ஷோரூம்களுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளுடன் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய ஆதரவை மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனமும் பெற்றிருக்கிறது.

முறைசாரா வர்த்தகத்தை தற்போது முறைப்படுத்தப்பட்ட வர்த்தகமாக மாற்றிக் காட்டி வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மாருதி ட்ரூ வேல்யூ மூலமாக விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் முழுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே விற்பனைக்கு செல்கிறது. அத்துடன், அதற்கான உறுதி சான்றும் வழங்கப்படுகிறது.

தற்போது நாட்டின் 151 நகரங்களில் 250 ஷோரூம்களுடன் மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 8 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்களை மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதில், மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய கார் மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது ட்ரூ வேல்யூ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 25 முதல் 45 வயதுக்கு இடையிலானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்," பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில், நம்பகமான வர்த்தகத்தை மாருதி ட்ரூ வேல்யூ மூலமாக வழங்கி வருகிறோம்.

வெளிப்படைத்தன்மையுடன், தரமான, நம்பகமான மாருதி கார்களை விற்பனை செய்கிறோம். பயன்படுத்தப்பட்ட கார்கள் வாடிக்கையாளர்களுக்கு செல்வதற்கு முன்னர் மிக கவனமாக பரிசோதித்து, புதுப்பித்து, பழுது நீக்கி வெளிப்படைத்தன்மையுடன் விற்பனை செய்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் விற்பனை செய்யும் பயன்படுத்தப்பட்ட மாருதி கார்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. புதிய கார் ஷோரூம்கள் போலவே, இப்போது அதிக கார்களை காட்சிப்படுத்துவதற்கான விசாலமான ஷோரூம்களுடன் மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம் வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

மேலும், அனைத்து ஷோரூம்களும் ஒருங்கிணைந்த முறையில் இணைய வசதி மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனத்தின் கார்களை இணையதளம் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களும் எளிதாக பார்த்து வாங்குவதற்கான வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








