சவாலான விலையில் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்-6 எம்பிவி கார் அறிமுகம்!
மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி கார் மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய விபரங்கள், தகவல்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா அடிப்படையிலான 6 சீட்டர் சொகுசு வகை மாடலாக எக்ஸ்எல்-6 எம்பிவி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் புதிய தோற்றத்தில் மாருதி எக்ஸ்எல்-6 கார் வந்துள்ளது. அதாவது, மாருதி எர்டிகாவிலிருந்து பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்களுடன் முற்றிலும் புதிய முகப்பு வடிவமைப்பை பெற்றிருக்கிறது. ஸ்கிட் பிளேட், புதிய பம்பர் அமைப்பும் இதனை முற்றிலுமாக வேறுபடுத்துகிறது.

புதிய டிசைனிலான அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ரெயில்கள், பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் மற்றும் வலிமையான பம்பர் அமைப்பு ஆகியவையும் இதனை சாதாரண எர்டிகா காரிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆனால், டெயில் லைட் க்ளஸ்ட்டரின் டிசைனில் பெரிய அளவிலான மாறுதல்கள் இல்லை.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் பரிமாணத்தில் சற்று கூடுதலாக இருப்பது மிக முக்கிய விஷயம். அத்துடன், இந்த காரில் 2+2+2 என்ற இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நடுவரிசையில் இரண்டு கேப்டன் வகை தனித் தனி இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதான் இந்த காரின் மிக முக்கிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மாருதி சுஸுகியின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது.

சாதாரண எர்டிகா காரைவிட இந்த கார் மிகவும் பிரிமீயமாக நிலைநிறுத்தப்பட்டு இருப்பதால், உட்புறத்தில் முற்றிலுமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீலில் சில்வர் அக்ஸென்ட் அலங்கார பாகங்கள் கவர்ச்சியை கூட்டுகின்றது. கருப்பு வண்ண லெதர் இருக்கைகளும் பிரிமீயத்தை உயர்த்துகிறது.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ என்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் உள்ளன. மடங்கும் வசதியுடன் சைடு மிரர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சாரகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 எம்பிவி கார் நெக்ஸா புளூ, பியர்ல் மெட்டாலிக், ஆபர்ன் ரெட், பியர்ல் பிரேவ் காக்கி, மெட்டாலிக் மேக்மா க்ரே, மெட்டாலிக் பிரிமீயம் சில்வர் மற்றும் பியர்ல் ஆர்டிக் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் ரூ.9.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் ரெனோ லாட்ஜி ஆகிய கார்களுக்கு மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








