ஷோரூம்களை சொந்தமாக அமைத்து டீலர்களுக்கு லீசு கொடுக்க மாருதி திட்டம்!
கார் ஷோரூம்களை சொந்த செலவில் அமைத்து, அதனை குத்தகை அடிப்படையில் டீலர்களுக்கு கொடுப்பதற்கு மாருதி சுஸுகி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. மொத்த உள்நாட்டு கார் விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை பெற்றிருக்கிறது. அதற்கு ஈடாக, பெரிய அளவிலான கார் விற்பனை மையங்களையும், சர்வீஸ் மையங்களையும் வைத்திருக்கிறது. சிறிய டவுன்களில் கூட மாருதி கார்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் செயல்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கி வருகிறது. இந்தநிலையில், பெரு நிறுவனங்களில் அவசர தேவைகளுக்காக சிறப்பு நிதியத்தில் குறிப்பிட்டத் தொகையை வைத்திருப்பது வழக்கம். அதுபோன்று மாருதி நிறுவனத்தின் கையிருப்பில் ரூ.30,000 கோடிக்கும் மேல் உபரியாக கையிருப்பில் இருப்பதாக தெரிகிறது.

இந்த தொகையை வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளதாக லைவ்மிண்ட் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்த பணத்தை எடுத்து புதிய கார் ஷோரூம்களை அமைத்து டீலர்களுக்கு குத்தகை அடிப்படையில் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

பெருநகரங்களில் புதிய ஷோரூம்கள் அமைப்பதற்கு பெரிய முதலீட்டை டீலர்கள் செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு கார் ஷோரூமை அமைப்பதற்கு ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், தன்னிடம் உள்ள கையிருப்பு பணத்தில் ஷோரூம்களை அமைத்து டீலர்களுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

டயர்-1 எனப்படும் முதலாம் நிலை நகரங்களில் புதிய ஷோரூம்களை அமைப்பதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஷோரூம் நடத்தும் டீலர்கள் கூடுதல் முதலீடு செய்வதை தவிர்த்து, இந்த முறையில் டீலர்களை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதேநேரத்தில், டீலர்களை நடத்துவதற்கான செலவுகளை டீலர்களே ஏற்க வேண்டும்.

இந்தமுறையின் மூலமாக முதலாம் நிலை நகரங்களில் அதிக ஷோரூம்களை மிக விரைவாக திறக்கும் வாய்ப்பும் மாருதி வசம் உள்ளது. இதனால் பிற கார் நிறுவனங்களை விட சிறப்பான ஷோரூம் மற்றும் சர்வீஸ் கட்டமைப்பு வசதியை மாருதி பெற முடியும்.
Source: Livemint


Click it and Unblock the Notifications








