ஸ்போர்ட் வேரியண்டாக மாறிய மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா: அறிமுக விபரம்...!
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மாடலை ஸ்போர்ட் வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலில் ஸ்போர்ட் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்பேக்ட் ரகத்திலான எஸ்யூவி மாடலை, ரூ. 7.29 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை அந்த நிறுவனம் முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டுதான் இந்திய எஸ்யூவி கார்கள் சந்தையில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படமால் இந்த கார் கடந்த நான்கு வருடங்களாக விற்பனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ஹூண்டாய் வெனியூ, மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களால் கடும் போட்டி ஏற்பட்டிருப்பதால், தற்போது புதிய ஸ்போர்ட் எடிசன் ரகத்திலான அதிகம் ப்ரீமியம் அம்சங்களைக் கொண்ட விட்டாரா ப்ரெஸ்ஸா மாடல் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய ஸ்போர்ட்ஸ் எடிசன் விட்டாரா ப்ரெஸ்ஸாவில் கணிசமான அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு, இந்த காரின் காஸ்மெடிக் மற்றும் அக்ஸசெரீஸ்கள் உள்ளிட்டவை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த மாடலில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில வசதிகளை ஆப்ஷனலாகவும் வழங்க அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.

பாடி கிராஃபிக்ஸ், சைட் பாடி க்ளாடிங், டூர் சில்-குவார்ட், வீல்-ஆர்க் கிட், ஸ்டியரிங் கவர், புதிய ரகத்திலான சீட் மற்றும் லெதர் உறைகள் உள்ளிட்டவை புதிய மாற்றங்களைக் கொண்ட அக்ஸசெரீஸ்களாக உள்ளன.

இதுபோன்ற காஸ்மெடிக் மாற்றத்தைத் தவிர விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் வேறெந்த மாற்றமும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. அந்தவகையில், தற்போது விற்பனையில் இருக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் அதே எஞ்ஜின்கள்தான் ஸ்போர்ட் எடிசன் விட்டாரா ப்ரெஸ்ஸாவில் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

அதேசமயம், மாருதி நிறுவனம் இந்திய கார் சந்தைக்காக புதிய எஞ்ஜின் ஆப்ஷனைக் கொண்ட விட்டாரா ப்ரெஸ்ஸாவை உருவாக்கி வருவதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான புதிய விட்டாரா ப்ரெஸ்ஸாதான் இந்தியாவில் விரைவில் களமிறங்க இருக்கின்றது. இதில், பெட்ரோல் ஆப்ஷன் வேரியண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், வருகின்ற 2020ம் ஆண்டில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படும் விட்டாரா ப்ரெஸ்ஸாவில், 1.2 லிட்டர் கே12 பெட்ரோல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், அண்மையில், அந்த நிறுவனமே பிஎஸ்-6 தரத்திற்கேற்ப தயாரித்த 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினையும் இந்த விட்டாரா ப்ரெஸ்ஸாவில் இணைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆகையால், வரும் காலத்தில் களமிறங்க இருக்கும் புதிய விட்டாரா ப்ரெஸ்ஸா கார் இரண்டுக்கும் மேற்பட்ட எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







