புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு அமோக வரவேற்பு!
புதிய வடிவமைப்பு மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ள புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டது நாள் முதல் முன்பதிவு குவிந்து வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் ரக கார் மார்க்கெட்டில் மாருதி வேகன் ஆர் கார் சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய வடிவமைப்பு மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் வந்த இந்த வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு முதல் பத்து தினங்களில் மட்டும் 12,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனால், புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது என காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரின் வெளிப்புற தோற்றம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உட்புற டிசைனும் மாறிவிட்டது. 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காகரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். விரைவில் சிஎன்ஜி மாடலிலும் அறிமுகமம் செய்யப்பட இருக்கிறது. எல்பிஜி மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் பட்ஜெட் கார்களில் சிறந்த தேர்வாக இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.4.19 லட்சம் என்ற மிக சவாலான விலையில் கிடைக்கிறது. டாடா டியாகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








