மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ காரின் முதல் 'லாட்' விற்று தீர்ந்தது
இந்தியாவிற்கு முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ கார்களும் விற்று தீர்ந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் 16ந் தேதி மெர்சிடிஸ் பென்ஸ் ஜி க்ளாஸ் வரிசையில் 350டீ என்ற புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜி க்ளாஸ் எஸ்யூவியின் ஜி63 ஏஎம்ஜி வேரியண்ட்டின் சாதாரண வகை மாடலாக களமிறக்கப்பட்டது.

இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு ரூ.1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஏஎம்ஜி பிராண்டு ஜி க்ளாஸ் காரைவிட விலை குறைவாக இருந்ததால், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆம். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றே வாரங்களில், முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஜி350டீ எஸ்யூவிகளும் விற்று தீர்ந்துவிட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆறு சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு செடான் காரிலும் இதே எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தியானது அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த மாடல் மணிக்கு 199 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ என்ற வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி மாடல். இந்த காரில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி மாடலை ஆஃப்ரோடு சாகசங்களுக்கும் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த கார் 241 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டது. அத்துடன், 700 மிமீ ஆழம் வரையிலான நீ்ர நிலைகளை எளிதாக கடந்து செல்வதற்கான தகவமைப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

இந்த காரின் டிசைன் செவ்வக வடிவிலான பெட்டியை போன்று சிலாகித்து கூறப்படுகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பான மாடலாக கூறலாம். இந்த காரில் 8 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், நிலைத்தன்மையை தக்க வைக்கும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மலைச்சாலைகளில் செல்லும்போது கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 மாடலானது ரூ.2.14 கோடியில் கிடைக்கும் நிலையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவியானது ரூ.1.50 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. விலை குறைவான ஜி க்ளாஸ் மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக்கிங் செய்துள்ளனர். இந்த புதிய எஸ்யூவி மாடலானது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








