இந்தியா வரும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி பேங்காக்கில் தரிசனம்!
விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி பேங்காக் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய எஸ்யூவியின் படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க கார் நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் தற்போது சீனாவை சேர்ந்த செயிக் வாகன தயாரிப்பு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் தனது முதல் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ்.

இந்த நிலையில், இரண்டாவது மாடலாக தனது eZS என்ற பெயரிலான எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்ஜி இசட்எக்ஸ் எஸ்யூவி போன்றே பார்ப்பதற்கு தோற்றமளிக்கிறது. அதாவது, தயாரிப்பு நிலை மாடலாகவே இருக்கிறது. இந்த எஸ்யூவியில் சார்ஜர் போர்ட் பகுதி எம்ஜி பேட்ஜ் மூலமாக மறைவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய எம்ஜி eZS எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த திறன் வாய்ந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். கியரை தேர்வு செய்வதற்கு ரோட்டரி டயல் இருப்பதும் சிறப்பான விஷயமாக உள்ளது. இந்த எஸ்யூவி ரக காரில் லித்தியம் அயான் பேட்டரி உள்ளது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 430 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை குயிக் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இது நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை சீனாவிலிருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், விலையை வெகுவாக கட்டுக்குள் வைத்து நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். எனினும், விலை நிர்ணயம்தான் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் வர்த்தகத்தை முன்னெடுக்கும் முக்கிய விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








