அசத்தும் அம்சங்களுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி: புதிய ஸ்பை படங்கள்!
அசத்தும் அம்சங்களுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வர இருப்பதை புதிய ஸ்பை படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சீனாவை சேர்ந்த செயிக் வாகன உற்பத்தி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் விற்பனையை துவங்க இருக்கிறது. முதல் மாடலாக ஹெக்டர் என்ற எஸ்யூவியை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.

இந்த சூழலில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது தற்போது தீவிரமான முறையில் இறுதிகட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் பெங்களூரில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டு கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ரஷ்லேன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்புறம் மிக பிரம்மாண்டமாக இருப்பது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். டாடா ஹாரியர் எஸ்யூவி போலவே, இந்த எஸ்யூவியிலும் பானட்டை ஒட்டிய முகப்பு பகுதியில் எல்இடி பகல்நேர விளக்குகளும், அதற்கு கீழாக எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, க்ரில் அமைப்புக்கு கீழ்பக்கத்தில் இருபுறத்திலும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் உள்ளது.

இந்த புதிய எஸ்யூவியில் எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல 10 ஸ்போக் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எனினும், அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தற்போது சில இன்டீரியர் படங்களும் இப்போது வெளியாகி இருக்கின்றன. அதில், பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான டியூவல் டோன் இன்டீரியர் தீம் கொண்டதாக உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொடுதிரை மூலமாகவே, ஏசியையும் கட்டுப்படுத்த முடியும். ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை, ஆரஞ்ச், நீலம் மற்றும் வெள்ளை என 7 விதமான வண்ணங்களில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் இடம்பெற்றிருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. கதவுகள், கப் ஹோல்டர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய பகுதிகளில் உள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 360 டிகிரி கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹார்மன் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம் இதன் அந்தஸ்தை உயர்த்தும் அம்சங்களில் ஒன்றாக இருக்கும். இந்த காரில் 4 ஸ்பீக்கர்கள், 4 ட்வீட்டர்கள் மற்றும் சப் ஊஃபர் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது.

இந்த ஆண்டு பிற்பாதியில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.
Source:Rushlane


Click it and Unblock the Notifications








