புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார் மீண்டும் சோதனை ஓட்டம்.. விலை பற்றிய தகவலும் வெளிவந்தது..
எம்ஜி மோட்டார்ஸின் ஹெக்டர் ப்ளஸ் மாடல் கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்களை ககன் சௌத்திரி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்த புகைப்படங்களின் மூலம் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரானது கேப்டன் இருக்கைகளை இரண்டாவது வரிசையிலும், கூடுதலாக மூன்றாவது வரிசையில் சீட் பெல்ட்களையும் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. ரீ-டிசைனில் முன்புற பம்பர், புதிய எல்இடி ஹெட்லைட்ஸ், புதிய க்ரில் அமைப்பு, ரீ-டிசைனில் ஃபாக் விளக்குகள் மற்றும் பின்புற பம்பர், புதிய எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் டிப்ஸ் போன்றவையும் இந்த காரில் உள்ளது என்பது இதற்கு முந்தைய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலமாகவே தெரிய வந்திருந்தது.

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடலும் தற்சமயம் ஹெக்டர் காரில் வழங்கப்பட்டு வருகின்ற அதே 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் தான் அறிமுகமாகவுள்ளது. ஹெக்டர் மாடலில் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 169 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது.

இந்த புதிய மாடலுக்கு மற்றொரு என்ஜின் தேர்வாக 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் 141 பிஎச்பி-ஐயும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த பெட்ரோல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

இந்த இரு என்ஜின் தேர்வுகளும் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டாலும் அவற்றின் வெளியிடும் ஆற்றல் அளவுகளில் எந்த மாறுதலும் இருக்காது என கூறப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல் அறிமுகத்திற்கு பிறகு டாடா ஹெக்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

எம்ஜி ஹெக்டர் மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் தற்சமயம் ரூ.12.48 லட்சத்தில் இருந்து ரூ.17.28 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹெக்டர் ப்ளஸ் மாடல் இதனை விட 1 லட்ச ரூபாய் கூடுதல் விலையுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெக்டர் ப்ளஸ் மாடலுடன் இசட்எஸ் எலக்ட்ரிக் காரையும் அடுத்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த எலக்ட்ரிக் மாடலின் விலை ரு.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த காரின் வேரியண்ட்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவது இதன் அறிமுகம் மிக விரைவில் தான் உள்ளது என்பதை காட்டுகிறது. இருப்பினும் இதன் அறிமுகத்திற்கு முன்னதாக இன்னும் சில சோதனை ஓட்டங்களையும் நாம் பார்ப்போம் என்றே தெரிகிறது. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy: Gagan choudhary/Instagram


Click it and Unblock the Notifications








