இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டிய எம்ஜி ஹெக்டர் கார் குறித்து வெளியான புதிய தகவல் இதுதான்
இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்? என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய மார்க்கெட்டில் கால் பதிக்க உள்ளது. இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள முதல் கார் ஹெக்டர் (MG Hector). எஸ்யூவி ரக காரான ஹெக்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எஸ்யூவி பிரியர்கள் ஹெக்டர் காருக்காக பெரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

அவர்களின் காத்திருப்பு கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. ஆம், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு தயாராகும் வகையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல், ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியை எம்ஜி நிறுவனம் தொடங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் எம்ஜி ஹெக்டர் நேரடியாக மோதவுள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி முதலில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

5 சீட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்த பின், ஹெக்டர் எஸ்யூவி காரின் 7 சீட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது சீன மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பயோஜென் 530 எஸ்யூவி (Baojun 530 SUV) காரின், ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்ட மாடல்தான் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால், எம்ஜி ஹெக்டர் மற்றும் பயோஜன் 530 ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களும், பெரும்பாலான டிசைன் அம்சங்களில் ஒத்து போகின்றன. அதே நேரத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் கேபின் டிசைன், வுல்லிங் அல்மாஸ் எஸ்யூவி (Wuling Almaz SUV) காரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. வுல்லிங் அல்மாஸ் எஸ்யூவி சமீபத்தில்தான் இந்தோனேஷிய மார்க்கெட்டில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் என பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன. இதுதவிர டிரைவர் இருக்கையை, எலக்ட்ரிக்கல் முறையில், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படவுள்ளது.

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

தற்போதைய நிலையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவின் முன்னணி நகரங்களில் டீலர்ஷிப்களை நிர்மாணிக்கும் பணிகளை செய்து வருகிறது. வரும் ஜூன் மாதத்திற்கு உள்ளாக எம்ஜி நிறுவனம் இந்தியாவில் 50 டீலர்ஷிப்களை திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 120 டச் பாயிண்ட்களை திறக்கவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார், குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவியை தொடர்ந்து, இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹெக்டர் 7 சீட்டர் எஸ்யூவி உள்ளிட்ட மாடல்களை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








