டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக வரும் எம்ஜி எஸ்யூவி... படங்களுடன் தகவல்கள்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு நிகரான எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இஇசட்எஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலையும் களமிறக்குகிறது.

இந்த நிலையைில், எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது மாடல் அறிமுகம் குறித்த தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி, எம்ஜி நிறுவனத்தின் மூன்றாவது எஸ்யூவி மாடலாக மேக்சஸ் டி90 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நிகரான ரகத்தை சேர்ந்தது. மிக கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவியில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எண்கோண வடிவிலான க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் என முகப்பு மிக கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த காரில் 17 அங்குலம் முதல் 21 அங்குலம் வரையிலான அலாய் சக்கரங்கள் தேர்வுக்காக வழங்கப்படும்.

இந்த எஸ்யூவியானது 5,005 மிமீ நீளமும், 1,932 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ்ஸ 2,950 மிமீ ஆக உள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் மிக தாராளமான உட்புற இடவசதியை அளிக்கும்.

இந்த காரில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், 8.0 அங்குல டிஜிட்டல் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்டுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

சீனாவில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 224 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதே எஞ்சின் இந்தியாவிலும் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 4 வீல் டிரைவ் மாடலும் தேர்வுக்கு கொடுக்கப்படும்.

எம்ஜி மேக்சஸ்டி90 எஸ்யூவியில் 7 விதமான நிலைகளில் மாற்றக்கூடிய டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலும் கிடைக்கும். மேலும், 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலைகளை அனாயசமாக எதிர்கொள்ளும்.

புதிய எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவியானது அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடல்களுடன் போட்டிபோடும்.
Source: ACI


Click it and Unblock the Notifications








