நம்ப முடியாத விலையில் சகல வசதிகளுடன் களமிறங்கும் பிரிட்டீஷ் கார்... புதிய வரலாறு படைக்க வாய்ப்பு...
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம், நம்ப முடியாத விலையில், சகல வசதிகளுடன் கூடிய ஹெக்டர் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் இந்தியா மார்க்கெட்டில் வெகு விரைவில் தனது வியாபாரத்தை தொடங்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் கார் ஹெக்டர் (MG Hector). இது எஸ்யூவி ரக கார் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஜூன் மாத மத்தியில் எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு எம்ஜி ஹெக்டர் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறது. இது தவிர ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் டாப் லெவல் வேரியண்ட்களுடனும் இது போட்டி போடும்.

இந்த சூழலில் எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஒரு பேட்டியில், ஹெக்டர் எஸ்யூவி காரின் விற்பனை இலக்கு தொடர்பான விபரங்களை எம்ஜி நிறுவனம் பகிர்ந்து கொண்டது. இதன்படி 2019ம் ஆண்டு இறுதிக்குள் 18,000 ஹெக்டர் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது 2019ம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் 3,000 ஹெக்டர் கார்கள் விற்பனையாக வேண்டும் என எம்ஜி எதிர்பார்க்கிறது. ஆனால் இதனை மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த செக்மெண்ட்டில் ஒரு கார் கூட இவ்வளவு பெரிய விற்பனை இலக்கை எட்டுவதில்லை.

இதில், புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியரும் அடக்கம். டாடா ஹாரியர் எஸ்யூவி கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பிருந்தே டாடா ஹாரியர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அப்படி இருந்தும் கூட டாடா நிறுவனத்தால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 ஹாரியர் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய கார்களின் சராசரி மாத விற்பனை 1,000-1,500 யூனிட்களாகதான் உள்ளது.

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகியவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்கு பரிட்சயமான கார்கள். நிலைமை இப்படி இருக்க எம்ஜி நிறுவனமோ இந்திய மார்க்கெட்டிற்கு புது வரவு. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதன் பெயர் கூட அவ்வளவாக பிரபலம் இல்லை.

எனவே எம்ஜி நிறுவனம் ஒரு மாதத்திற்கு எப்படி 3,000 ஹெக்டர் கார்களை விற்பனை செய்யும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இந்த விற்பனை இலக்கை எட்ட எம்ஜி மோட்டார் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நம்ப முடியாத விலையில், செக்மெண்ட்டிலேயே சிறந்த காரை வழங்க வேண்டும் என எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது. புதிய எம்ஜி ஹெக்டர் கார் சக்தி வாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் வரவுள்ளது.

அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளன. இதுதவிர எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரில் அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமிருக்காது. வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், ஏசிக்கு ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உதாரணங்கள்.

அதே சமயம் இசிம் கனெக்டட் டெக் (eSIM Connected Tech), இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், பனரோமிக் சன் ரூஃப் ஆகிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. ரூ.15-20 லட்சம் என்ற விலையில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படவுள்ள வசதிகளுடன் ஒப்பிடுகையில், இது நியாயமான விலையாகவே இருக்கும் என கருதப்படுகிறது. எனவே எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனையில் பெரிய அளவில் சாதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications








