எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நடமாடும் கார் ஷோரூம் அறிமுகம்!
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் நடமாடும் கார் ஷோரூம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய நடமாடும் கார் ஷோரூம் குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஜூன் மாதம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் கார் ஷோரூம்களை திறந்திருக்கும் அந்த நிறுவனம், ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதால் ஷோரூம்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

எனினும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை வாங்குவதற்கு பெருநகரங்களுக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை மனதில் வைத்து, நடமாடும் கார் ஷோரூமை களமிறக்கி உள்ளது.

ஆட்டோமோட்டிவ் ரீட்டெயில் 2.0 என்ற பெயரில் இந்த நடமாடும் கார் ஷோரூம் திட்டத்தை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிடுகிறது. 45 அடி நீளமுடைய டிரெயிலரில் கார் ஷோரூம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. எம்ஜி எக்ஸ்பீரியன்ஸ் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் இந்த நடமாடும் ஷோரூம் அழைக்கப்படுகிறது.

இந்த எம்ஜி நடமாடும் ஷோரூமில் ஹெக்டர் எஸ்யூவி கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், சாதாரண எம்ஜி கார் ஷோரூம்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த கார் ஷோரூமில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, டிஜிட்டல் திரை மூலமாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன், ஹெக்டர் எஸ்யூவிக்கு வழங்கப்படும் கூடுதல் மற்றும் கஸ்மடைஸ் ஆக்சஸெரீகளை கம்ப்யூட்டர் மூலமாக பொருத்தி திரையில் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த புதிய நடமாடும் ஷோரூம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தகப் பிரிவு அதிகாரி கவுரவ் குப்தா கூறுகையில்,"நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய நடமாடும் ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும்.
எங்களது ஷோரூம் இல்லாத நகரங்களில் ஹெக்டர் எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய நடமாடும் ஷோரூம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான விற்பனை சேவையை வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் பல பகுதிகளில் நடமாடும் ஷோரூம் செல்ல இருப்பதாக எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அண்மையில் பெங்களூரில் முற்றிலும் புதுமையான டிஜிட்டல் கார் ஷோரூமை எம்ஜி மோட்டார்ஸ் திறந்தது.

இந்த புதிய ஷோரூமில் ஹெக்டர் எஸ்யூவி காட்சிக்கு நிறுத்தப்படவில்லை. ஆனால், டிஜிட்டல் திரை மூலமாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை முழுமையாக காண்பதற்கான வாய்ப்பை இந்த ஷோரூம் வழங்கும். வாடிக்கையாளர்கள் இங்கேயே முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலமாக, சிறிய அளவிலான இடத்திலேயே குறைந்த முதலீட்டில் ஷோரூம்களை அமைக்கும் முன்மாதிரி திட்டத்தை எம்ஜி கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








