எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவின் முதல் கார் ஷோரூம் குர்கானில் திறப்பு!
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் கார் ஷோரூம் குர்கானில் திறக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதத்தில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் இந்திய கார் சந்தையில் களமிறங்க உள்ளது. முதலாவது மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதற்கு ஏதுவாக புதிய கார் ஷோரூம்களை திறக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது இந்தியாவின் முதலாவது கார் ஷோரூமை குர்கானில் திறந்துள்ளது எம்ஜி மோட்டார். இந்த ஷோரூம் எம்ஜியின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், மிகவும் பிரிமீயமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் புகழ்பெற்ற பிக் பென் கடிகார கோபுர அமைப்பு தெரு விளக்குகள், டெலிபோன் பூத்துகளுடன் இந்த ஷோரூமை வடிவமைத்துள்ளனர். இந்த ஷோரூமில் 1965ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்ஜி மிட்ஜெஸ்ட் 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால், எம்ஜி ஷோரூம் வரும் வாடிக்கையாளர்கள் ஓர் உன்னதமான அனுபவத்தை நிச்சயம் பெறமுடியும்.

இந்த ஷோரூமின் உள்ளே 36 டிவி திரைகள் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப்பெரிய எல்இடி திரையும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றிய விபரங்கள் மற்றும் வேரியண்ட்டை தேர்வு செய்வதற்கான வசதியும் வழங்கப்படும்.

ஷோரூமின் நடுவில் எம்ஜி கஃபே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமிற்குள் ஒரு பகுதியில் காரின் முக்கிய உதிரிபாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 48 வோல்ட் ஹைப்ரிட் எஞ்சினும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூமின் மேல்தளத்தில்தான் எம்ஜி இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் செயல்ப்ட இருக்கிறது. அலுவலகம் மற்றும் ஷோரூம் ஆகியவை ரூ.150 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. குர்கான் ஷோரூமை தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் எம்ஜி நிறுவனத்தின் ஷோரூம்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

வரும் செப்டம்பருக்குள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஷோரூம்களை திறந்துவிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 125 கார் ஷோரூம்களை திறப்பதற்கான முடிவுடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications